நகராட்சி ஊழியர் காலில் விழுந்த விவகாரம்; கவுன்சிலர்கள், அதிகாரிகள் மீது வன்கொடுமை வழக்கு
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி 20வது வார்டு கவுன்சிலர் ரம்யா (33). இவர் கடந்த 29ம்தேதி நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் முனியப்பனிடம் கோப்புகளை தேடுமாறு கூறியுள்ளார். அப்போது, ரம்யாவை முனியப்பன் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொறுப்பு ஆணையர் சரவணனிடம் உடனே ரம்யா முறையிடவே, அவர் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து சிறிதுநேரத்திற்கு பின் புகார் கடிதத்துடன் ஆணையர் அறைக்கு ரம்யா சென்ற நிலையில், ஆணையர் இல்லை. இதையடுத்து அங்கிருந்த நகராட்சி மேலாளர் நெடுமாறன், வருவாய் அலுவலர் பழனி உள்ளிட்டோர் ரம்யாவிடம் எதற்காக வந்துள்ளீர்கள் என்று கேட்க நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து முனியப்பனை அழைத்து விசாரித்த அதிகாரிகள் பெண் கவுன்சிலரிடம் ஒருமையில் பேசிய புகாரால் பதவி உயர்வு தடைபடும் என கூறவே, அங்கிருந்த ரம்யாவின் காலில் திடீரென முனியப்பன் விழுந்துள்ளார்.
முனியப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் திண்டிவனம் நகராட்சி மேலாளர் நெடுமாறன், வருவாய் அலுவலர் பழனி, சுகாதார அலுவலர் செந்தில்குமார், நகர அமைப்பு அலுவலர் திலகவதி மற்றும் கவுன்சிலர்கள் ரம்யா, ரவிச்சந்திரன், ரம்யாவின் கணவர் ராஜா, பிர்லா செல்வம், நகரமன்ற தலைவரின் உதவியாளர் காமராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது (எஸ்சிஎஸ்டி) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அதிமுக எம்எல்ஏ மீது வழக்கு
கவுன்சிலர் காலில் நகராட்சி ஊழியர் விழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அதிமுக எம்எல்ஏ அர்ஜூனன் தலைமையில் அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில், தடையை மீறி முற்றுகையிட்ட அதிமுக எம்எல்ஏ உள்ளிட்டோர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
மாணவர்களை கால் அமுக்க சொன்ன ஹெச்.எம். சஸ்பெண்ட்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 32 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியையாக கலைவாணி பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் 30ம் தேதி மதியம், பள்ளியில் உணவு அருந்திய தலைமை ஆசிரியை கலைவாணி, வகுப்பறையில் மாணவர்களை தனது காலை அமுக்கி விடும்படி கூறியதால், 2 மாணவர்கள் அவருக்கு காலை அமுக்கி விட்டனர். இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து, தலைமை ஆசிரியை கலைவாணியை, கே.வேட்ரப்பட்டி தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை அளித்த நிலையில், நேற்று தலைமை ஆசிரியை கலைவாணியை, சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.