நகராட்சி பகுதியில் பிரதான ஓடையை தூர்வாரி நடவடிக்கை
*அதிகாரிகள் நேரில் ஆய்வு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் குடியிருப்புகளில் மழைநீர் புகுவதை தடுக்க பிரதான ஓடையை தூர்வாரப்பட்டதை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பொட்டுமேடு பகுதியிலிருந்து துவங்கும் பெரிய அளவிலான கழிவு நீரோடையானது மரப்பேட்டை, நேரு காலனி, கண்ணப்பன் நகர், வழியாக சென்று கிருஷ்ணா குளத்தை சென்றடைகிறது. மழைக்காலத்தின் போது, இந்த பிரதான நீரோடையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வரும்போது, அதனை தொட்டுள்ள குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கனமழையின்போது தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து விடும் சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டில் பொள்ளாச்சி பகுதில் தாழ்வான பகுதியில் குடியிருப்பு மற்றும பிரதான கழிவு நீரோடை அருகே உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிலும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரிய அளவிலான சாக்கடையில் மழைநீர் விரைந்து செல்ல வசதியாக, நகராட்சி மூலம் தூர்வாரி ஆழப்படுத்தும் பணியும், அதில் தேங்கிய இருந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி நேற்று முன்தினம் துவங்கப்பட்டது.
அப்பணி ஓரிரு நாட்களில் நிறைவடையும் நிலையில் உள்ளது. ஆழப்படுத்தி சீரமைக்கப்பட்ட பெரிய அளவிலான கழிவுநீர் ஓடையில், மழைநீர் தேங்காமல் ஆறுபோல் விரைந்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. நகராட்சி மூலம் தூர்வாரப்பட்ட பிரதான கழிவு நீரோடை பகுதியை நேற்று, மாவட்ட கலெக்டர் பவன்குமார், நகர்மன்ற தலைவர் சியமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மழைநீர் புகும் இடமாக தெரியும் பகுதியையும் ஆய்வு செய்து, அங்கு தேவையான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ நகராட்சி எல்லைக்குட்பட்ட தாழ்வான பகுதிகள், மழைநீர் வடிகால் கால்வாய்கள், சின்னாம்பாளையம் மரப்பேட்டை ஓடை மருதமலை ஆண்டவர் லே அவுட் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுத்தம் செய்து தூர்வாரப்பட்டது. நகரின் பொட்டுமேடு மரப்பேட்டை பள்ளம், நேருநகர், பெரியார் காலனி, கல்லுக்குழி, குமரன்நகர், கண்ணப்பன்நகர், அண்ணாகாலனி, ஜீவா நகர், ஷெரிப்காலனி, மோதிராபுரம், மருதமலை ஆண்டவர் லே அவுட் போன்ற தாழ்வான பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்காக நிவாரண மையங்கள் தயார்படுத்தப்பட்டது. அங்கு போதியளவு மின்சாரம், குடிநீர், கழிப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது’ என்றனர்.