மும்மூர்த்திகளை ஒன்றிணைத்து விடக் கூடாது என்பதில் உஷாராக இருக்கும் சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘இரவு வேலைக்கு தடை உத்தரவால் யூனியன் மகளிரிடத்தில் அதிருப்தி கோஷம் ஒலிக்கிறதாமே..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘சுற்றுலாவுக்கு பெயர்போன புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் சுற்றுலாவாசிகளின் கும்மாளத்துக்கு அளவே இல்லையாம்.. ரெஸ்டோ பார் அடாவடிகள், அரைகுறை பவனிகள், நள்ளிரவில் ரோடு லூட்டிகள் என பல தொல்லை கொடுத்தாலும் ஆளும் தரப்போ வருமானமே கதியாக கிடப்பதால் அதிகாரிகளும் எதையும் கண்டுகொள்வதில்லையாம்.. காக்கிகளும் சூசகமான ஒத்துழைப்பு நல்குகிறதாம்..
ஆனால் குடும்பத்தை காப்பாத்த உள்ளூர் இல்லத்தரசிகளும், படித்த கன்னிகளும் கம்பெனிகளில் வேலைக்கு சென்றுவந்த நிலையில் திடீரென இரவு பணியில் பெண்கள் கூடாது என்ற தடாலடி உத்தரவை ஆளும் தரப்பு போட்டுள்ளதாம்.. இதனால் வேலையிழக்கும் சூழலுக்கு சிலர் தள்ளப்பட, மக்கள் பிரதிநிதிகளிடம் கொந்தளித்தார்களாம்.. இதன் எதிரொலியாக ஆளும் தரப்புக்கு எதிராக மகளிர் அமைப்புகள் போர்க்கொடி தூக்க, தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்களாம்..
வெளியூர்வாசிகளுக்கு அல்வா, உள்ளூர்வாசிகளுக்கு கல்தாவா என்ற அதிருப்தி கோஷம்தான் யூனியன் மகளிரிடத்தில் ஒலிக்கிறதாம்.. இதுபற்றிதான் ஊர் முழுக்க பேச்சு..’’ என்று முடித்தார் விக்கியானந்தா. ‘‘சேலத்துக்காரரின் வயிற்றில் புளியை கரைத்து விடுவதுதான் சின்ன மம்மியின் வாடிக்கையாக இருக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி மம்மியின் ஆட்சிக்காலத்தில் கொடிகட்டி பறந்தவர் இணை பிரியாத சகோதரியாக இருந்த சிறைப்பறவையாம்.. மம்மியின் மறைவுக்கு பிறகு சின்னமம்மியாக பதவி உயர்வு பெற்று பெங்களூரூ ஜெயிலில் 4 ஆண்டுகள் காலத்தை கழித்தாங்க..
ஆட்சி காலத்தில் மம்மியை யாரும் எளிதில் பார்த்துவிட முடியாதாம்.. யார் எம்எல்ஏ ஆகணும், மந்திரி ஆகணும் என்பதை கூட தற்போதைய சின்னமம்மி தான் முடிவு செய்வாங்களாம்.. அதையெல்லாம் அப்போதே தெரிந்த இலைக்கட்சி தலைவர், சரியான நேரத்தில் தூக்கி எறிந்திட்டாராம்.. என்றாலும் இன்னும் மம்மி காலத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் சின்னமம்மி, வானத்தை வில்லாக வளைப்பேன், மணலை கயிறாக திரிப்பேன் என சொல்லிக்கிட்டிருக்காங்களாம்.. ஆனால் அவரால் அரியாசனத்தில் இருந்தவர்கள் எல்லோரும் காதை பொத்திக்கொண்டிருக்காங்களாம்..
எந்த பதவியும் இல்லாத நேரத்திலேயே இப்படி என்றால் ஆட்சியில் இருக்கும்போது எவ்வளவு பவருடன் என்ன பாடு பட்டிருப்போம் என நினைத்து அப்படியே பதுங்குறாங்களாம்.. அதே நேரத்தில் எல்லோரும் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள் என அவ்வப்போது கிளப்பி விட்டு, இலைக்கட்சி தலைவரின் வயிற்றில் புளியை கரைத்து விடுவது சின்னமம்மியின் வாடிக்கையாம்.. அதே நேரத்தில் குக்கர்காரர், தேனிக்காரர், சின்னமம்மி மும்மூர்த்திகளை ஒன்றிணைத்துவிட கூடாது என்பதில் இலைக்கட்சி தலைவர் ரொம்பவே உஷாராக இருக்காராம்..
இதற்கான வேலை கச்சிதமாக நடந்துக்கிட்டிருக்காம்.. என்றாலும் இலைக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி எங்களுக்கு கிடைத்தே தீரும்.. முதல்வர் வேட்பாளராக இலைக்கட்சி தலைவரை அறிவிப்போம்.. தேர்தல் முடியும் நேரத்தில் எல்லாமே மாறும் என சின்னமம்மியின் அடிப்பொடிகள் அடிச்சி சொல்றாங்க.. அதோடு தேர்தல் செலவுகளையும் நாங்களே பார்த்துக்கொள்வதால் அனைவரின் ஆதரவும் எங்களுக்கு கிடைக்கும் எனவும் அடிச்சி விடுறாங்க..
சொல்பவர்கள் ஆயிரம் சொன்னாலும் கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்கும் ஆட்கள் நாங்கள் இல்லை என மார்தட்டுகின்றனர் இலைக்கட்சி தலைவரின் அடிப்பொடிகள்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அரசியல் ரீதியாத பிரச்னையால் வெளியே தலைகாட்டவே மறுக்கிறாராமே மாஜி அமைச்சர் ஒருத்தர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கொசுவலை உற்பத்திக்கு பெயர் கொண்ட மாவட்டத்தில் உள்ள இலை கட்சி மாஜி அமைச்சர் வெளியில் தலைகாட்டாமல் இருந்து வருகிறாராம்.. கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மட்டும் அவரை தேடி சென்று சந்தித்து பேசிக்கிறாங்களாம்..
மாஜி அமைச்சர் திடீரென வெளியே வருவதும், நிர்வாகிகளை சந்திப்பதும், பின்னர் தலைகாட்டாமல் இருப்பதை வாடிக்கையாக வச்சிருக்கிறாராம்.. இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல், நிர்வாகிகளுக்குள்ளே புலம்பிக்கிறாங்க.. அரசியல் ரீதியாக ஏதாவது அவருக்கு பிரச்னை இருக்கும் என்பதால் அவர் தலைகாட்டாமல் இருக்கலாம்.. விரைவில் அது வெளிப்படக்கூடும்.. முக்கியமாக, மாஜி அமைச்சர் விஷயத்தில் தலைமையிடமும் பெரிதாக கண்டுகொள்வது இல்லை என கட்சிக்குள்ளே பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மகளிடம் தமிழக மாம்பழத்தை கொடுத்தாலும் மக்களிடம் செல்வாக்கு படிப்படியாக குறைந்து வருவதால் ஜெயிக்கப் போவது யாரு என அக்கட்சிக்காரங்களே முணுமுணுக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாம்பழக் கட்சியில் செயல் தலைவர் பதவியை மகனுக்கு போட்டியாக மகளுக்கு வழங்கி தடாலடி காட்டிட்டாராம் தந்தை.. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றுப் பயணத்தில் சுறுசுறுப்புடன் காணப்படுகிறாராம் அன்பு மகனானவர்..
இதற்கு காரணம் பீகார் தேர்தல் தானாம்.. அங்கு மாம்பழத்தில் ஆட்களை நிறுத்தப் போவதாக ஆவணம் சமர்ப்பித்து அதை கையில் பெற்று விட்டாராம்.. அடுத்த சுதந்திர தினம் வரையிலும் பழம் சாப்பிட ஆணையம் அனுமதி கொடுத்து விட்டதால் தந்தையின் தடாலடிக்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் கூலாக இருக்கிறாராம் அன்பு மகன்..
தந்தை முறையீடு செய்தாலும் கொடுத்த பழத்தை இனி பறிக்க முடியாது என்பதால் அன்பு ஆதரவாளர்களிடம் ‘முதல் வெற்றி’ முழக்கம் ஒலிக்கிறதாம்.. ஆனால் தந்தையோ இனி மகளிடம்தான் தமிழக மாம்பழம் என கூறி விட்டாராம்.. தந்தை, மகனின் நிலைமை இப்படியிருக்க மக்களிடமோ மாம்பழ செல்வாக்கு படிப்படியாக குறைந்துள்ளதால் ஜெயிக்கப் போவது யாரு என்ற கேள்வி அக்கட்சி வட்டாரத்தில் எழுந்திருக்காம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.