மும்பையில் நள்ளிரவு முதல் தொடர் கனமழை: சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது
மும்பை:மும்பையில் நள்ளிரவில் தொடர் கனமழையால் சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது; தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வடலா பகுதியில் மோனோ ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. நேற்று இரவு முதல் மும்பையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் கடுமையான தண்ணீர் தேங்கியுள்ளது. மும்பையின் வடலா பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மோனோ ரயில் நிறுத்தப்பட்டது. வடலாவில் உள்ள மோனோ ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் 17 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மும்பை நகரின் தாழ்வான பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியதால் அலுவலக உச்ச நேரங்களில் போக்குவரத்து மெதுவாக இருந்தது. இரவு மற்றும் காலையில் பெய்த கனமழையைத் தொடர்ந்து உள்ளூர் ரயில்கள் சிறிது தாமதமாக இயக்கப்பட்டன.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) கூற்றுப்படி, நேற்று காலை 8.30 மணி முதல் திங்கள்கிழமை காலை 5.30 மணி வரை, கொலாபாவில் அதிகபட்சமாக 88.2 மிமீ மழை பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாந்த்ராவில் 82 மிமீ மழையும் மற்றும் பைகுல்லாவில் 73 மிமீ மழையும் பெய்தது. மஹுல் டாடா மின் நிலையத்தில் 70.5 மிமீ மழையும், ஜூஹுவில் 45.0 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. சாண்டாக்ரூஸில் 36.6 மிமீ மழையும், மகாலட்சுமியில் 36.5 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.