மும்பையில் இருந்து ஆந்திரா வழியாக சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கொண்டு வந்த ரூ.1.80 கோடி லேப்டாப்கள் திருட்டு
திருமலை: மும்பையில் இருந்து ஆந்திரா வழியாக சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கொண்டு வந்த ரூ.1.80 கோடி மதிப்புள்ள லேப்டாப்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தயாரிக்கப்பட்ட 255 லேப்டாப்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட பிரிண்டர்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி, சென்னைக்கு கடந்த 22ம்தேதி புறப்பட்டது. இந்த கன்டெய்னருடன் அதே நிறுவனத்தை சேர்ந்த மேலும் 4 கன்டெய்னர்களில் வேறு சில பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டது. 5 கன்டெய்னர்களின் கதவுகளிலும் ‘அலாரம்’ பொருத்தப்பட்டு இருந்தது. இந்த கன்டெய்னர் லாரிகள் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் அட்டாங்கி அடுத்த சின்னகோத்தப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது லேப்டாப்கள் ஏற்றி வந்த கன்டெய்னரின் கதவு திறக்கப்பட்டதாக லாரி நிறுவன நிறுவன பிரதிநிதிகளுக்கு எச்சரிக்கை ‘அலாரம்’ ஒலித்தது.
உடனடியாக அவர்கள் விஜயவாடாவில் உள்ள தங்கள் நிறுவன கிளை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, மேதரமெட்லா அருகே உள்ள ஒரு தாபா அருகே கன்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டிருந்து. தொடர்ந்து அதில் பார்த்தபோது, அதில் இருந்த 255 லேப்டாப்கள், 1 மானிட்டர் மற்றும் ஒரு டோனர் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது. பிரிண்டர்கள் மட்டும் இருந்தது. டிரைவர், கிளீனரை காணவில்லை. அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக மேதரமெட்லா போலீசில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சீராலா டிஎஸ்பி மொயின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், லேப்டாப்பை திருடிச்சென்றவர்கள் யார்? டிரைவர், கிளீனர் எங்கே சென்றனர். திருட்டுக்கும்,. இவர்களுக்கும் சம்பந்தம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுபோன லேப்டாப்களின் மதிப்பு ரூ.1.80 கோடி வரை இருக்கும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.