மராட்டிய மாநிலத்தில் மகளிர் உதவித் தொகை திட்டத்தில் 12,431 ஆண் பயனாளிகள் பயன் பெற்றது அம்பலம்!!
மும்பை : மராட்டிய மாநிலத்தில் மகளிர் உதவித் தொகை திட்டத்தில் ஆண் பயனாளிகள் பயன் பெற்றது அம்பலம் ஆகியுள்ளது. மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி வழங்கும் 'லாட்கி பகின்' (அன்பு சகோதரி) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தான் பாரதிய ஜனதா தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்ததாக அந்த கூட்டணி தலைவர்களே கூறினர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதால் பயனாளிகள் தேர்வு பணி அவசர கோலத்தில் செய்து முடிக்கப்பட்டது. அப்போது இதை பயன்படுத்தி தகுதியற்ற பலர் திட்டத்தில் இணைந்தது தெரியவந்தது.
குறிப்பாக அரசு வேலை செய்யும் பெண்கள் பலர் இந்த திட்டத்தில் சேர்ந்து இருந்தனர். அவர்களின் பெயர்களை நீக்க அரசு நடவடிக்கை எடுத்தது.இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தில் மகளிர் உதவித் தொகை திட்டத்தில் ஆண் பயனாளிகள் பயன் பெற்றதாக ஆர்.டி.ஐ. கீழ் ஆங்கில நாளேடு எழுப்பிய கேள்விக்கு மராட்டிய பெண்கள், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை பதில் அளித்துள்ளது. இதன் மூலம் மராட்டியத்தில் மகளிர் உதவித் தொகை திட்டத்தில் 12,431 ஆண் பயனாளிகள் உதவித் தொகை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 77,980 பெண்களுக்கு தவறாக ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்பட்டதும் ஆர்.டி.ஐ. தகவலில் தெரியவந்துள்ளது.