மும்பையை 5 நாளாக முடக்கிய மராத்தா போராட்டம் முடிவுக்கு வந்தது: ஜராங்கே உண்ணாவிரதம் வாபஸ்
மும்பை: மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு கோரி, மராத்தா ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடந்த 29ம் தேதி மும்பை ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார். இவருக்கு ஆதரவாக பல ஆயிரம் மராத்தா சமூகத்தினர் மும்பைக்கு வந்து பங்கேற்றனர். இதனால், ஆசாத் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், போரட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நேற்று மதியம் 3 மணிக்குள் ஜராங்கே உள்ளிட்ட போராட்டக்காரர்களை மும்பையில் இருந்து வெளியேற்ற அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி நேற்று மதியம் போலீசார் போராட்டக்காரர்கள் வெளியேற நோட்டீஸ் அனுப்பினர். சாலையில் இருந்தவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை துவக்கினர். இதனிடையே ஐதராபாத் நிஜாம் காலத்து ஆவணங்களின்படி சான்றாவணம் சமர்ப்பிக்கும் தகுதியுடைய மராத்தாக்களை குன்பிக்களாக அங்கீகரிப்பதாகவும், பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாகவும் அறிவித்தது. இதற்கான குழு அமைத்து மகாராஷ்டிரா அரசு அரசாணை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து பழச்சாறு அருந்தி ஜராங்கே உண்ணாவிரதத்தை முடித்தார்.