பிரதமர் மோடி சிங்கம் போன்றவர்; அதான் ரத்தத்திற்கு ரத்தத்தால் பதிலடி கொடுத்தார்: ஏக்நாத் ஷிண்டே!
மும்பை: பிரதமர் மோடி சிங்கம் போன்றவர். அதான் ரத்தத்திற்கு, ரத்தத்தால் பதிலடி கொடுத்தார் என மராட்டிய துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டத்தில், மாநில துணை முதலமைச்சரும், ஷிண்டே அணியின் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பங்கேற்று பேசினார். அப்போது அவர், தேசியப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிரொலி மற்றும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை குறித்தும் கடும் கருத்துகளை வெளியிட்டார்.
2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஆனால் அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணியின் அரசு, யாரோ ஒருவரின் அழுத்தத்தினால் பாகிஸ்தானை தாக்கத் தயங்கியது. இது ஒரு கோழைத்தனம் மட்டுமல்ல, இந்திய மக்களுக்கு செய்த துரோகம்,” என்று கூறினார். ஆனால் அதேநேரம் பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பதிலடி பற்றி பேசும் அவர், ரத்தத்திற்கு, ரத்தத்தால் பதிலடி கொடுத்தவர் மோடி. அவர் ஒரு சிங்கம். பாகிஸ்தான் நரி போன்றது. சிங்கத்தின் தோலை அணிந்தால் நரியால் சிங்கமாக முடியாது. மோடி எப்போதும் சிங்கமாகவே இருப்பார் என்றார்.
மேலும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை குறித்தும் ஷிண்டே கடுமையாக விமர்சித்தார். உத்தவ் தலைமையிலான சிவசேனா, இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தை கேள்விக்குள்ளாக்கியது. அது பாகிஸ்தானின் குரலாக மாறியது. அவர்களது தசரா கூட்டம் பாகிஸ்தானில் நடத்தப்பட வேண்டியதுதான். பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை தலைமை விருந்தினராக அழைத்திருக்கலாம் எனச் சாடினார்.