பராமரிப்புப் பணிகள் நடப்பதால் மும்பை விமான நிலையம் நாளை மூடல்: 6 மணி நேரம் விமானங்கள் இயங்காது
மும்பை: மும்பை விமான நிலையத்தில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாளை 6 மணி நேரத்திற்கு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம ்மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், அத்தியாவசியமான வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (நவ. 20) 6 மணி நேரத்திற்கு அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும். பருவமழைக்குப் பிந்தைய இந்த வழக்கமான பராமரிப்புப் பணியின்போது, விமான ஓடுதளங்களில் விரிவான ஆய்வுகள், மேற்பரப்பு பழுதுபார்ப்புப் பணிகள், ஓடுதள விளக்குகள், குறியீடுகள் மற்றும் வடிகால் அமைப்புகளின் தொழில்நுட்ப மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும். இந்த 6 மணி நேரமும், விமான நிலையத்தின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை என இரண்டு ஓடுதளங்களும் செயல்படாது. இதுகுறித்த அறிவிப்பு, பல மாதங்களுக்கு முன்பே அனைத்து விமான நிறுவனங்களுக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுவிட்டது.
இதனால், விமான நிறுவனங்கள் தங்களது விமான நேரங்களை மாற்றி அமைத்து, பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளன. இருப்பினும், நாளை பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள், விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்பு, தங்களது விமானத்தின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.