முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு..!!
கேரளா: முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்து வருகின்றனர். முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் 144 அடியாக தண்ணீர் தேக்கி கொள்ள அனுமதி அளித்தது. 3 நபர் கண்காணிப்பு குழுவை அமைத்து அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள செய்தது. குழுவானது தொடர்ந்து அணையை மேற்பார்வையிட்டு வருகிறது. இந்த நிலையில், 2024ம் ஆண்டு 3 நபர் குழு கலைக்கப்பட்டு தேசிய அணைகள் பாதுகாப்பு குழுவுக்கு ஆணை வழங்கியது. அப்போது 7 நபர் கொண்ட முதன்மை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவிற்கு சார்பாக துணை குழு அமைக்கப்பட்டு அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குனர் கிரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அதில் தமிழக பிரிவினரும், கேரளா பிரிவினரும் உள்ளனர். இந்த குழுவினர் ஒவ்வொரு மாதமும் அணையினை பார்வையிட்டு அணையின் நிலவரங்களை முதன்மை கண்காணிப்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில் இந்த ஆண்டு கடந்த ஜூன் 3ம் தேதி அணையை பார்வையிட்ட துணை கண்காணிப்பு குழு இன்று அணையை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்து அணையின் பராமரிப்பு குறித்து இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முதன்மை கண்காணிப்பு குழுவிற்கு இன்று அனுப்ப உள்ளது. இதற்கான பணியினை தற்போது தொடங்கி அணையினை பார்வையிட்டு வருகின்றனர். மெயின் அணை உள்ளிட்ட அணையின் இதர பகுதிகளை பார்வையிட்டு முடிவுகள் முதன்மை கண்காணிப்பு குழுவிற்கு அனுப்ப உள்ளது.