முக்கொம்பு காவிரி பாலத்தில் விலகிய தூண்: அதிகாரிகள் ஆய்வு
திருச்சி: மேட்டூரிலிருந்து அகண்ட காவிரியாக வரும் காவிரி ஆறு திருச்சி மாவட்டம் முக்கொம்பில் காவிரி மற்றும் கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. எளமனூருக்கும்-வாத்தலைக்கும் இடையே காவிரி ஆற்றின் நடுவில் இயற்கையாக அமைந்துள்ள தீவுப்பகுதியான முக்கொம்பில் கடந்த 1834ம் ஆண்டு கதவணை கட்டும் பணி தொடங்கி 1836ம் ஆண்டு முடிந்தது. காவிரியில் 42 மதகுகள், தெற்கு பிரிவில் 45 மதகுகள், வடக்கு பிரிவில் 10 மதகுகள் என மொத்தம் கொள்ளிடத்தில் 55 மதகுகள் உள்ளன.
காவிரியில் அதிக அளவில் தண்ணீர் வரும் போது கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. இந்த இடத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பெரிய அளவிலான ஷட்டர்களுடன் கூடிய அணை உள்ளது. இதன் மீது பாலம் அமைக்கப்பட்டு இரு சக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் கட்டப்பட்டது. இன்று காலை நிலவரப்படி இந்நிலையில் மேட்டூரிலிருந்து விநாடிக்கு 50,677 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. முக்கொம்பில் இருந்து காவிரியில் விநாடிக்கு 24,410 ஆயிரம் கன அடி, கொள்ளிடத்தில் 22,374 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில் முக்கொம்பு காவிரியில் உள்ள 42 மதகுகளில் 35வது மதகு இன்று லேசாக உள்வாங்கியது. இதனால் ஷட்டர்ஷை தாங்கி நின்ற ஒரு தூண் 1 அடி அளவுக்கு விலகி உள்ளது. இதனால் பாலத்தின் ஸ்திர தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் முருகேசன் தலைமையில் நிர்வாக பொறியாளர் நித்தியானந்தம் மற்றும் அதிகாரிகள் சென்று தூண் விலகி இருப்பதை பார்த்து ஆய்வு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த தூண் கடந்தாண்டே சற்று விலகியது. தற்போது விலகவில்லை. இதனால் பாலத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றனர்.
ஏற்கனவே 45 மதகுகளுடன் கொள்ளிடத்தில கட்டப்பட்ட முக்கொம்பு மேலணை கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி வலுவிழந்து 6 முதல் 12 வரை 9 மதகுகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் கொள்ளிடத்தில் புதிதாக 45 மதகுகளுடன் ரூ.325 கோடியில் கதவணை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.