இந்திய பொருட்கள் மீதான வரியை நீக்கக் கோரி டிரம்புக்கு எதிராக எம்பிக்கள் போர்க்கொடி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்
வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் இந்தியா மீது விதித்த கூடுதல் வரியை நீக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் மூன்று எம்பிக்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். உக்ரைன் போர் சூழலில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதைக் காரணம் காட்டி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு கட்டங்களாக மொத்தம் 50 சதவீத கூடுதல் வரியை விதித்திருந்தார். தேசிய அவசரநிலை சட்டத்தைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 1 மற்றும் 27 ஆகிய தேதிகளில் விதிக்கப்பட்ட இந்த வரியால், வர்த்தக ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அதிபர் டிரம்ப் அறிவித்த இந்த அவசரநிலை பிரகடனத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ராஜா கிருஷ்ணமூர்த்தி, டெபோரா ரோஸ் மற்றும் மார்க் விசே ஆகிய மூன்று ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் நேற்று பிரதிநிதிகள் சபையில் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர்.
இது அதிபரின் அதிகார வரம்பை மீறிய செயல் என்றும், வர்த்தகக் கொள்கைகள் மீதான நாடாளுமன்றத்தின் அரசியல் சாசன அதிகாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் இது தொடர்பாக 20க்கும் மேற்பட்ட எம்பிக்கள் அதிபருக்கு கடிதம் எழுதியும் பலன் அளிக்காத நிலையில் தற்போது இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், இதனால் அமெரிக்காவின் பொருளாதார நலன்கள் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘இந்த வரி விதிப்பானது அமெரிக்கத் தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோரை பாதிப்பதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் உயர்த்துகிறது. மேலும், மிக முக்கியமான இந்திய - அமெரிக்க நல்லுறவில் விரிசலை ஏற்படுத்துவதோடு விநியோகச் சங்கிலியையும் சீர்குலைக்கிறது. குறிப்பாக வட கரோலினா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் உள்ள தொழில்நுட்பத் துறைகள் மற்றும் நுகர்வோர் புதிய வரிவிதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக எம்பிக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.