அவையில் எம்பிக்கள் கூச்சலிடுவது சரியல்ல;சிறையில் இருந்து கொண்டு அரசை ஆளலாமா?: புதிய மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்
புதுடெல்லி: சிறையில் இருந்து கொண்டே பிரதமர் உள்ளிட்ட பதவியில் இருப்பவர்கள் நாட்டை ஆள முடியாது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ் போன்ற தலைவர்களைப் பாதுகாப்பதற்காக, குற்றவாளிகளான எம்பிக்களைப் பதவி நீக்கத்தில் இருந்து காப்பாற்ற ஒரு அவசரச் சட்டத்தை அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்தது.
ஆனால், அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அந்த அவசரச் சட்டத்தை முட்டாள்தனம் என்று கூறி, செய்தியாளர் சந்திப்பிலேயே கிழித்தெறிந்து, சொந்த கட்சி பிரதமரையே அவமதித்தார். அதே ராகுல் காந்தி, இப்போது தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி வைத்துள்ளார். மேலும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சத்யேந்திர ஜெயின் நான்கு வழக்குகளில் சிறையில் இருந்தார்; டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் வழக்கில் கைதான பிறகும் பதவியில் இருந்து விலக மறுத்தார். இதுபோன்ற இரட்டை நிலைப்பாட்டின் அடிப்படையில், எதிர்க்கட்சிகள் தங்கள் வசதிக்கேற்ப விதிகளை வளைக்கின்றன. இந்த பின்னணியில்தான், அரசியலமைப்பு (130வது திருத்த) மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய சட்டத்திருத்தத்தின்படி, பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு, 30 நாட்களுக்குள் ஜாமீன் பெறாவிட்டால், அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லையெனில் சட்டப்படி பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். பிரதமர், முதல்வர், அமைச்சர் போன்ற உயர் பதவியில் இருக்கும் எந்த தலைவராவது சிறையில் இருந்து கொண்டே நாட்டை ஆள முடியுமா? இது நமது ஜனநாயகத்தின் மாண்புக்குப் பொருந்துமா? மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் பிரதமரின் பதவியையும் கொண்டு வருவதற்கு பிரதமர் மோடியே காரணம். இதற்கு காரணம், எந்தவொரு தனிநபரைச் சார்ந்தும், நாடு இயங்க முடியாது’ என்றார்.
ஒன்றிய அரசு கொண்டு வந்த இந்த மசோதாவை அரசியலமைப்பிற்கு விரோதமானது, கறுப்பு மசோதா என்று கூறி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டன. மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி, பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களைச் சிறையில் தள்ளி, மாநில அரசுகளைக் கவிழ்க்கவே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதற்குப் பதிலளித்த அமித் ஷா, ‘ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதைக் கூட தடுப்பது ஜனநாயக விரோதமானது. இந்த மசோதா இரு அவைகளின் கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படும்; அங்கு அனைவரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். விவாதம் செய்ய வேண்டிய அவையில் கூச்சலிடுவது சரியல்ல’ என்று எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடினார்.