எம்பி, எம்எல்ஏ மீது தாக்குதல் குறித்து என்ஐஏ விசாரணை: பாஜ வலியுறுத்தல்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பாஜவின் மால்டா தொகுதி எம்பி ககன் முர்மூ மற்றும் எம்எல்ஏ சங்கர் கோஷ் உள்ளிட்டோர் சென்றிருந்தார். நகர்காட்டா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கும்போது எம்பி மற்றும் எம்எல்ஏ மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் பலத்த காயமடைந்த முர்மூ மற்றும் கோஷ் ஆகிய சிலிகுரியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எம்பி, எம்எல்ஏ மீது தாக்குதல் குறித்து என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில பாஜ வலியுறுத்தி உள்ளது. இது குறித்து பாஜ மாநில தலைவர் பட்டாச்சார்யா கூறுகையில்,\\\\”பாஜ எம்பி மற்றும் சிலிகுட்டி எம்எல்ஏவும், சட்டமன்ற கட்சி தலைமை கொறடாவுமான கோஷ் ஆகியோர் மீதான தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மக்களிடையே தீவிரவாத சூழலையும், மத ரீதியாக பிரிவினையையும் உருவாக்குவதற்காக இரண்டு பாஜ தலைவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள் மற்றும் ரோஹிங்கியாக்களால் நடத்தப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நிலைமையை கண்காணித்து வருகிறார்கள். \\” என்றார்.
இதனிடையே படுகாயமடைந்த எம்பி ககன் முர்மூ தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது கண்ணுக்கு கீழே உள்ள எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. முகத்தில் பலத்த காயமடைந்துள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எம்பி மற்றும் எம்எல்ஏவை மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் முதல்வர் மம்தா பானர்ஜியும் சிலிகுரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பாஜ எம்பியை சந்தித்தார்.
* மற்றொரு பாஜ எம்எல்ஏ மீது தாக்குதல்
மேற்கு வங்கத்தின் அலிபுர்துவாரில் நேற்று வெள்ள நிவாரணப்பொருட்களை விநியோகிக்கும்போது பாஜ எம்எல்ஏ மனோஜ்குமார் ஓரான் கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் சுற்றி வளைத்து தாக்கப்பட்டதாக மருத்துவமனையில் ஓரான் தெரிவித்துள்ளார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இது ஆதாரமற்றது என்று கூறியுள்ளது.