ம.பி, ராஜஸ்தானில் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம்; Coldrif இருமல் சிரப் தமிழ்நாட்டில் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு ..!!
சென்னை: இருமல் மருந்து விவகாரத்தில் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ள நிலையில், Coldrif இருமல் சிரப் தமிழ்நாட்டில் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஏற்கெனவே 6 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் 3 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளது. ராஜஸ்தானில் இருமல் மருந்து உட்கொண்ட நிலையில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளது. குழந்தைகள் உயிரிழப்புக்கு அவர்கள் உட்கொண்ட இருமல் மருந்தே காரணம் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய பிரதேசஅரசு மற்றும் ராஜஸ்தான் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இருமல் மருந்தில் கலப்படம் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் கோளாறு இருந்ததா என்ன காரணம் என்பதை கண்டறிவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தது. உயிரிழந்த அனைத்து குழந்தைகளின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டபோது, சிறுநீரக திசுவில் டைஎத்தீலின் கிளைக்கால் எனும் ரசாயன பொருள் கலக்கப்பட்டு சிறுநீரகம் செயழிந்திருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இருமல் சிரப், காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா எனும் நிறுவனத்தின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனையடுத்து இந்த மருத்து தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மத்தியப் பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ்குமார் மௌரியா, தமிழக மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்த சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் இந்த மருத்து விற்பனைக்கு தற்போது தடை பிறக்கப்பிக்கப் பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் கோல்ட்ரிஃப் சிரப் விற்பனையைத் தடுக்கவும், இருப்பு உள்ள இடங்களில் அவற்றின் விற்பனையை தடுக்கவும் மருந்து ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மருந்து கட்டுப்பாட்டுத் துணை இயக்குநர் எஸ். குருபாரதி தெரிவித்தார். அடுத்த உத்தரவு வரும்வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார்.
குழந்தைகளின் மரணத்திற்குக் காரணமானதாகச் சந்தேகிக்கப்படும் அதே கோல்ட்ரிஃப் சிரப்பின் ஒரு தொகுதி உட்பட, அதே உற்பத்தியாளர் தயாரித்த வேறு நான்கு வகையான மருந்துகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த இருமல் சிரப் புதுச்சேரி, ஒடிசா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுவதால், இந்த மாநிலங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு, மருந்து விற்பனையைத் தடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.