மத்திய மொசாம்பிக் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு!
டெல்லி: மத்திய மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா துறைமுகத்திற்கு அருகே இந்தியப் பெருங்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர். படகில் பயணித்த 21 பேரில் 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் மாயமான சிலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மொசாம்பிக்கில் உள்ள இந்தியத் தூதரகத்தின் கூற்றுப்படி; படகு ஒரு டேங்கரில் இருந்து பணியாளர்களை ஏற்றிச் சென்றது. வழக்கமான பரிமாற்ற நடவடிக்கைக்காக அவர்கள் டேங்கருக்கு மாற்றப்பட்டபோது படகு திடீரென கவிழ்ந்ததால் விபத்து ஏற்பட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து ஐந்து இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் நடைபெற்று வருகிறது.