மலைப்பகுதியில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரிப்பு குற்றாலம் மெயினருவி, ஐந்தருவிகளில் 2ம் நாளாக பொதுமக்கள் குளிக்க தடை
நெல்லை : மலைப்பகுதிகளில் பெய்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் குற்றாலம் மெயினரு, ஐந்தருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை 2வது நாளாக நேற்றும் நீடித்தது. தென்காசி மாவட்டத்தில் சீசன் காலத்தில் இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் குற்றாலத்தில் கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கடந்த வாரம் பத்து தினங்கள் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு ஞாயிறு, திங்கள் ஆகிய இரு தினங்கள் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் மீண்டும் பெய்த மழையின் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதனால் பாதுகாப்பு கருதி மெயின் அருவி ஐந்தருவி ஆகியவற்றில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே பழைய குற்றாலத்தில் பராமரிப்பு பணிகள் துவங்காத காரணத்தால் 13 தினங்களாக தடை நீடிக்கிறது.
தற்போது தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவி ஆகிய 3 அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புலி அருவி மற்றும் சிற்றருவி ஆகியவற்றில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று பகலிலும் அவ்வப்போது மழை பெய்தது. பெரும்பாலான நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.