மலையானவரின் உள்குத்து வேலையால் டெல்லிக்கு விசிட் அடிக்கும் அல்வா ஊர் எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘பலாப்பழக்காரர் யாகம் வளர்த்த கதை தான் ஹனிபீ மாவட்டத்துல ஹாட் டாபிக்காக இருக்காமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் சேலத்துக்காரர், தனக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் பலாப்பழக்காரரின் மாவட்டத்திற்குள் நுழையும் போது பயங்கரமான வரவேற்பா இருக்க வேண்டுமென உத்தரவிட்டதால், இலைக்கட்சியின் மாஜிக்களான உளறல்காரர், ஷாக்கடிக்கும் துறையின் மாஜி, தூங்கா நகரின் உதயமானவர் உள்ளிட்டோர் தீவிரமாக களமிறங்கி மும்முரமாக வேலை பார்த்தார்களாம்.. ஆனால், பலாப்பழக்காரரோ சேலத்துக்காரரின் ஹனிபீ மாவட்ட வருகையை பிசுபிசுத்துப் போகச் செய்து விடவேண்டும் என்று பிளான் செய்து, கோட்டையானவரின் உதவியை கேட்டாராம்.. இதனால் தான் ஹனிபீ மாவட்டத்தில் சேலத்துக்காரர் இருக்கும்போது சரியாக வாயை திறந்த கோட்டையானவர் சேலத்துக்காரருக்கு கெடு விதித்து பரபரப்பை தன் பக்கம் அள்ளிக் கொண்டாராம்.. இதனால், ரொம்பவே அப்செட் மன நிலையில் இருந்த சேலத்துக்காரரை ஆங்காங்கே வழியில் மறித்த சம்பவம் ரொம்பவே வேதனையடையச் செய்துவிட்டதாம்.. இதனால், புத்துணர்ச்சி அடைந்த பலாப்பழக்காரர் சூட்டோடு சூடாக தனது வீட்டில் பரிகார யாக பூஜையுடன், எதிரிகளை வீழ்த்தும் வகையில் மலையாள தேசத்தின் பகவதி அம்மன் கோயிலுக்கு போய் நள்ளிரவு மாந்திரீக யாக பூஜையும் நடத்தி முடித்துள்ளாராம்.. இதுதான் ஹனிபீ மாவட்டத்தின் தற்போதைய ஹாட் டாபிக்காக இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டீல் பேசுறதுக்குன்னே தனியா ஒரு புரோக்கர் நியமிச்ச அதிகாரி யாரு..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டம் பட்டு நகரம் ஆறு அணி வட்டத்தை ஆட்சி செய்ற ஆபிசு இருக்குது.. இங்க தலைமை அதிகாரியாக 3 எழுத்து கொண்ட ஒருத்தரு பணிபுரிஞ்சுட்டு வர்றாரு.. இவங்ககிட்ட, அந்த வட்டத்து வருவாய் பிரிவு ஒர்க் சம்பந்தமாக ஏகப்பட்ட மனுக்கள் வருதாம்.. இதையெல்லாம் டீல் பேசுறதுக்கு தனியா ஒரு புரோக்கரை நியமிச்சிருக்காங்களாம்.. இவருதான் எல்லா டீலையும் பேசி, தரம்பிரிச்சு ரேட் பிக்ஸ் செய்வாராம்.. உடனே உடனே சம்திங்கும் அந்த அதிகாரியோட கோட்ரஸ்ல இருக்குற ஆத்துக்காரர் கிட்ட போய் சேர்ந்திடுமாம்.. டீலிங் பேசப்படாத மனுக்கள் கிடப்பில்தானாம்.. ரெய்டு ஏதாவது வந்துடும்னு ஆபிஸ் பெரும்பாலும் இருக்குறதில்லையாம்.. எப்பவுமே பீல்டு ஒர்க்தானாம்.. டீலிங் பேச தெரியாத ஜனங்க மனுவோட காத்திருக்கிற நிலைதான் தொடர் கதையாக இருக்குதாம்.. ஆபீஸ் சீல் உள்பட முக்கிய கோப்புகள் கோட்ரஸ்ல தான் இருக்குதாம்.. உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் போகாம இருக்கவும் சில அதிகாரிகளை கையில அவங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து வெச்சிருக்காராம்.. இதுபோததுன்னு அந்த பிரிவுல போஸ்டிங் போடுறதுக்கும் இந்த அதிகாரி மூலமாக பெரிய அளவுல பேரம் நடக்குதாம்.. உயர் அதிகாரிகள் கள விசாரணை நடத்தி உண்மை நிலவரத்தை தெரிஞ்சுகிட்டு நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை குரல்கள் ஒலிக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அலுவலர்கள் பெருமைபடும் அளவுக்கு சட்டமன்ற உறுதிமொழிக் குழு கூட்டம் நீண்டநேரம் நடந்ததாமே..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழிக்குழு ஆய்வுக்கு சென்றதாம்.. குழுவின் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் 4 மணி நேரம் தொடர்ச்சியாக நடந்திருக்கு.. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டாலும் மாலை 3 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடத்தப்பட்டதாம்.. மாவட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த 95 அலுவலர்களை வரவழைத்து விரிவாக ஆய்வு நடத்தினாராம் குழு தலைவரான முருகனானவர்.. வழக்கமாக நடைபெறும் சட்டமன்ற குழு கூட்டங்கள் இவ்வாறு நேரம் நீளாதே, என்று அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இவரது கூட்டத்தில் மாவட்டத்தில் தொகுதிகளில் உள்ள பிற எம்.எல்.ஏ.க்கள் வருவது இல்லை. குழுவில் இடம்பெற்றவர்களை கொண்டே தீவிரமாக கூட்டத்தை நடத்தி விடுவார்.. முடிக்காத பொருட்களை நிலுவையில் உள்ளதாக கூறிவிடுவார் என்று பெருமைப்படுகின்றனர் அலுவலர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குக்கர்காரரின் விசில் சத்தம் அல்வா ஊரின் எம்எல்ஏக்கு எதிரான அஸ்திரமாக திரும்பி விட்டதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மலராத தேசிய கட்சியின் மாநில தலைவரான அல்வா ஊரின் எம்எல்ஏக்கு இது போதாத காலம் போலும்.. இதன் பின்னணியில் மலையான முன்னாள் தலைவர் உள்ளாராம்.. அதாவது, மலையான மாநில தலைவரை நீக்கினால் மட்டுமே கூட்டணி என சேலம்காரர் மலராத தேசிய கட்சிக்கு நிபந்தனை போட்டார். எப்படியாவது இலை கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் போதும் என்று எண்ணிய தேசிய கட்சியும் மலையான தலைவரை நீக்கி விட்டு அல்வா ஊரின் எம்எல்ஏவை புதிய தலைவராக நியமிச்சது.. அல்வா ஊரின் எம்எல்ஏவும் சேலம்காரருக்கு விருந்து வைத்து, விமர்சனம் செய்யாமல் கூட்டணிக்கு இணங்கி நடந்து கொண்டார். அதே நேரத்தில் இலை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தேனிக்காரர், குக்கர்காரர் ஆகியோரிடம் உஷாராக இருந்தார்.
இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் என்ற நிலையில், கோபிகாரரின் கலகக் குரலை பயன்படுத்திக் கொண்ட மலராத தேசிய கட்சியின் மலையான முன்னாள் தலைவர் குக்கர்காரரை உசுப்பி விட, அதன் எதிரொலி தான், அல்வா ஊரின் எம்எல்ஏ, கூட்டணியை சரியாக கையாளவில்லை என குக்கர் விசில் அடித்தாராம்.. அவரது விசில் சத்தம் தனக்கு எதிரான அஸ்திரமாக திரும்பும் என அல்வா ஊரின் எம்எல்ஏ எதிர்பார்க்கவில்லையாம்.. எதையும் கிரிமினலாக சிந்திக்கும் முன்னாள் தலைவரின் உள்குத்தை தேசிய தலைமையிடம் மீண்டும் விளக்கத்தான் அல்வா ஊரின் எம்எல்ஏ திடீரென டெல்லி பயணம் செல்கிறாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.