மலைவாழ் பெண்களின் வாழ்வியலில் அக்கறையுடன் ராதா- வேணுகோபால் தம்பதி!
தழல் சேவை அமைப்பு பற்றி..
நான் எம்பில் பிஎட் படித்து தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். எனது கணவர் வேணுகோபால் தொழில் கல்வி படித்து விட்டு தனியார் துறையில் எலக்ட்ரிகல் துறையில் வேலை செய்து வந்தார். அதன் பிறகு எங்களது ஆர்வத்தின் காரணமாக சூரிய ஒளியில் இயங்கக் கூடிய சோலார் பேனல்களை நாங்களே டிசைன் செய்து புதியதாக வடிவமைத்து விற்பனை செய்து வந்தோம். நாங்கள் சோலார் பம்புகள், சோலார் நகரும் சூரிய உலர்த்தி, சிறுதானிய அரைவை இயந்திரங்களை வடிவமைத்துள்ளோம். அதன் பிறகு தழல் என்கிற சேவை அமைப்பினை எங்களது நண்பர்களோடு சேர்ந்து நடத்திவருகிறோம். எங்கள் நண்பர்களோடு இணைந்து திட்ட வரையறைகளை செய்வோம். அரசு உதவிகள் மற்றும் தனிநபர் உதவியின் மூலமாக கடந்த 3 வருடங்களாக கிராமப்புற பிரச்னைகள் நீர் மின்சாரம் மற்றும் உணவு உற்பத்தி என அவர்களது அடிப்படை வாழ்வாதாரத்திற்கு தேவையான சுழலை வகுத்து தருகிறோம். இதுவரை 13 மலை கிராமங்களில், ஏறக்குறைய 5000 பேருக்கு மேல் பயன் பெற்று இருக்கிறார்கள். இதன் மூலம் மலைவாழ் பெண்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்ய ஆரம்பித்தோம். தழல் மூலமாக மலைக் கிராம பெண்களுக்கு சோலார் அரைவை இயந்திரம் வழங்கி பல பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கி வருகிறோம். ஒவ்வொரு மலைக் கிராமத்திலும் 10 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம். அதில் 50 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
சோலார் அரைவை இயந்திரங்கள் குறித்து..?
நாங்கள் சந்தித்த மலைக் கிராம பெண்கள் பலர் அங்கே விளையும் கேழ்வரகு போன்றவற்றை அரிசிக்காக கொடுத்து வந்ததை பார்த்தோம். இவர்களுக்கு சோலார் அரைவை இயந்திரங்களை கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என நினைத்து முதலில் 13 கிராமங்களில் இதனை இலவசமாக கொடுத்தோம். இதற்காக நிறைய தனியார் அமைப்புகள் மற்றும் நண்பர்களிடம் உதவிகள் கிடைத்தது. தற்போது கேழ்வரகு போன்ற தானியங்களை அரைத்து விற்பனை செய்து வருகிறார்கள் இப்பெண்கள். இதன் அடுத்த கட்டமாகத் தான் சோலார் நகரும் சூரிய மின் உலர்த்தி களை வழங்க அரசுடனும் தனியாரிடம் பேசி வருகிறோம். அரசு எங்களது அரைவை எந்திரம் மாடலை அங்கீகரித்திருப்பது எங்களது உழைப்பிற்கும் ஆர்வத்திற்கும் கிடைத்த அங்கீகாரம்.
சோலார் மின் உலர்த்தி குறித்து..
சோலார் உலர்த்தி சூரிய ஒளியிலும் அதே நேரம் மின்சாரத்தின் மூலமாகவும் செயல்படும் வகையில் கன்வெட்டர் பயன்படுத்தி வடிவமைப்பு செய்துள்ளோம். இதனை மிக குறைவான பட்ஜெட்டில் தயாரித்து வழங்குகிறோம். இது எளிதாக நகர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சூரிய ஒளியில் இயங்கக் கூடியது என்பதால் மின்சாரப் பயன்பாடு அதிகம் கிடையாது. தொழில்முனைவோர்கள் பயன்படுத்த எளிதான செயல்முறைகள் கொண்டது. எதிர்காலத்தில் அரசுடன் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நிறைய மலைக் கிராமங்களில் வழங்க இருக்கிறோம். இது குறித்த திட்ட வரைவுகள் மற்றும் முன்னெடுப்புகள் செய்துவருகிறோம். இதனால் நிறைய மலைக் கிராம பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க இயலும்.
சோலார் மின் உலர்த்திகளின் பயன்கள் என்ன?
நாம் பொருட்களை சாதாரணமாக வெயிலில் காய வைக்கும்போது மண், தூசு மற்றும் குப்பைகள் காற்றில் பறந்து வந்து சேரும். ஆனால் சூரிய உலர்த்திகளில் உலர்த்தும்போது சுத்தமாக தூசு எதுவும் இருக்காது. இதில் கதிர்வீச்சு பிரச்னைகளும் இல்லை. பறவைகள் எச்சம் போன்ற தொல்லைகள் இருக்காது. இது குறைந்த நேரத்தில் பக்குவமாக பொருட்களை உலர்த்தும்.இதன் வெப்பத்தை 60 சென்டிகிரேடு வரை அதிகப்படுத்தி பயன்படுத்த முடியும். UV முறையில் ஆனது. பிளாஸ்டிக்கால் ஆனது கிடையாது.எப்போது யார் வேண்டுமானாலும் எளிதாக இயக்கி பயன்படுத்தக் கூடிய முறையில் வடிவமைத்துள்ளோம். இதற்கான காப்புரிமைக்கும் முயற்சித்துள்ளோம்.
இந்த சூரிய உலர்த்திகளை எவற்றில் உபயோகிக்கலாம்?
மருந்து தயாரிக்க , கீரை பவுடர் பழங்கள் தயாரிக்க, சிறுதானியங்களை அரைக்க, ஏபிசி மால்ட் ,மீன், கருவாடு, சூப் பவுடர்.. முடவாட்டுகால், சோப்பு சாம்பிராணி.. நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் நேந்திரங்காய் மால்ட் பனங்கிழங்கு மால்ட் போன்ற பல்வேறு பொருட்களை உலர்த்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை சிறு தொழில் முனைவோர்கள், ஹோட்டல் இன்டஸ்ட்ரீஸ், உணவு இன்டஸ்ட்ரீஸ், பார்மா இன்டஸ்ட்ரீஸ் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த இன்டஸ்ட்ரீஸ் சார்ந்த பலருக்கும் உபயோகமாகத் தான் இருக்கும்.
எதிர்காலத் திட்டங்கள் குறித்து...
இந்த நகரும் சூரிய உலர்த்திகளை நிறைய மலைவாழ் பெண்களுக்கு தர வேண்டும். தற்போது 5 மலை கிராமத்திற்கு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். தான்சானியா வாணிக க்ருப் எங்களிடம் பேசிவருகிறது அங்கே இருக்கின்ற பழங்குடியின மக்களுக்கு உதவ எங்களுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். அதே போன்று தமிழ்நாட்டு ஸ்டார்டப் அமைப்பு மற்றும் நமது அரசாங்கத்தோடு இணைந்து பணியாற்ற இருக்கிறோம். இதற்கென அக்ரி சக்தி விருது கிடைத்துள்ளது. இந்த திட்டங்கள் குறித்து நிறைய அரசு அமைப்புகள், அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேசிவருகிறோம் . எழுத்தாளர் ஜெயமோகன் சார் மற்றும் நண்பர்கள் நிதியுதவி மூலமாக தழல் தொல்குடி கூட்டுறவு மையத்தினை சோளக்கர் மக்களுக்காக சோலகனை எனும் பழங்குடி கிராமத்தில் பெண்களை இணைத்து நடத்தி வருகிறோம். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடைய யானை டாக்டர் புத்தகம் மூலமாகத் தான் எனக்கு சமூக சிந்தனையும் ஏற்பட்டது என்கிறார்கள் ராதா வேணுகோபால் தம்பதிகள்.
- தனுஜா ஜெயராமன்