எவரெஸ்ட் சிகரத்தில் பயங்கர பனிப்புயல்; தவிக்கும் 1000 ட்ரெக்கிங் வீரர்கள்.. மீட்பு பணிகள் தீவிரம்
இமயமலை: உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிப்புயலால் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட டிரெக்கிங் வீரர்கள் கீழே இறங்கமுடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே சீனநாட்டை சேர்ந்த திபெத் பிராந்தியம் அமைப்பு உள்ளது. இப்பிராந்தியம் கடல் மட்டத்தில் இருந்து 4900 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இங்கே கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் தொடங்கிய பனிப்புயல் சனிக்கிழமை முழுவதுமே தொடர்ந்துள்ளது.
இதனால் சாலைகள் அடைக்கப்பட்டு ஏற்கனவே மலையில் இருந்த ட்ரெக்கிங் வீரர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர். எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கியுள்ள வீரர்களின் எண்ணிக்கை 1000த்திற்கு மேலே இருக்கும் என்று கூறப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக பெய்த கனமழை மற்றும் பனிப்பொழிவு இமயமலை பகுதியில் தாக்கியதால் ட்ரெக்கிங் வீரர்கள் சிக்கினர்.
ஞாயிற்று கிழமை நிலவரப்படி 350 ட்ரெக்கிங் வீரர்கள் சிறிய நகரத்தை அடைந்தனர். சிக்கி இருக்கும் 200க்கும் மேற்பட்ட ட்ரெக்கிங் வீரர்களுடன் மீட்பு படையினரால் தொடர்பு கொள்ளப்பட்டதாக தகவல் வந்துள்ளது. தற்போது இமயமலை சரிவுகளில் வெப்பநிலை குறைந்ததால் 100கணக்கான உள்ளூர் கிராமமக்களும், மீட்பு படையினரும், ட்ரோன்கள், குதிரைகள் மற்றும் காட்டெருமைகளின் உதவியுடன்
பணியை அகற்றவும் சிக்கி இருக்கும் மீதமுள்ளவர்களை மீட்கவும் அனுப்பப்பட்டனர். மேலும் ஒரு நபர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வருகின்றன. இந்த பிராந்தியத்தில் கடுமையான தட்ப வெப்பநிலை நிலவி வருகிறது. ஒவொரு ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தை அடைய பலர் முயற்சித்தாலும் இது மிகவும் ஆபத்தான பயணமாக பார்க்கப்படுகிறது.