கோயம்பேடு மார்க்கெட் மற்றும் நெடுஞ்சாலையை ஆக்கிரமிக்கும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி: அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அண்ணாநகர், ஆக.29: கோயம்பேடு மார்க்கெட், நெற்குன்றம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து மாடுகள் படுத்துக்கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட் வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் சுற்றித்திரிகின்றன. சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும், என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட், நெற்குன்றம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகளில் ஏராளமான மாடுகள் அதிகமாக நடமாடுகின்றன. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மாடுகள் மார்க்கெட் பகுதியில் நுழைவதால், வாடிக்கையாளர்கள் அச்சத்துடன் வந்து செல்வதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். அதேபோல், முக்கிய சாலைகளை வழிமறித்து அங்கேயே படுத்துக்கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, சாலைகளை ஆக்கிரமித்து படுத்துக்கிடக்கும் மாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.