திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே 3 மகன்கள் சேர்ந்து தாய்க்கு கோயில் கட்டி குடமுழுக்கு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே வெளியாரி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. மனைவி முத்துக்காளியம்மாள் (66). மகன்கள் சண்முகநாதன், சரவணன், சந்தோஷ். மூத்தமகன் சண்முகநாதன் புதுக்கோட்டையிலும், மற்ற 2 மகன்கள் சிங்கப்பூரிலும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2021ம் ஆண்டு முத்துக்காளியம்மாள் காலமானார். தங்களை பாசமாக வளர்த்த தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக சொந்த ஊரிலேயே அவருக்கு கோயில் கட்ட மகன்கள் முடிவு செய்தனர். அதன்படி சுமார் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கோயில் கட்டி 550 கிலோ எடையில் 5 அடி உயரத்தில் தாயாரின் ஐம்பொன் சிலையை வைத்தனர். கடந்த 16ம் தேதி கும்பாபிஷேகத்தையும் நடத்தியுள்ளனர். இவ்விழாவில் ஆதீனங்கள், உறவினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பது வாக்கு. அதையும் கடந்து தாயை தெய்வமாக பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பி குடமுழுக்கு நடத்திய மகன்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.