வரலட்சுமி விரதத்தையொட்டி திருச்சானூரில் பத்மாவதி தாயார் தங்க தேரில் பவனி
திருமலை: திருச்சானூர் கோயிலில் வரலட்சுமி விரதத்தையொட்டி பத்மாவதி தாயார் தங்க தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரதம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. சுப்ரபாதம் மற்றும் சஹஸ்ர நாமச்சரனையுடன் பத்மாவதி தாயார் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு தங்க சேலை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து உற்சவர் பத்மாவதி தாயார் ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
அங்கு ரோஜா, சாமந்தி, மல்லிகை, சம்பங்கி, துளசி, பன்னீர் இலை, மருவம், தாமரை மலர்களால் தாயாருக்கு அபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து மாலை பத்மாவதி தாயார் தங்க தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து தாயாரை வழிபட்டனர். வரலட்சுமி விரத பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் மற்றும் லட்சுமி அஷ்டோத்திரம் நாமாவளி புத்தகம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.