குஜராத்தில் நெஞ்சைப் பிளக்கும் கொடூரம்: 2 வயது மகனை 13வது மாடியில் இருந்து வீசிக் கொன்ற தாய்; தானும் குதித்து தற்கொலை
சூரத்: குஜராத் மாநிலம், சூரத்தின் அல்தானில் உள்ள குடியிருப்புப் பகுதியில் பூஜா என்ற பெண் தனது இரண்டு வயது மகனுடன் வசித்து வந்தார். இவர் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 13வது மாடிக்குச் சென்று, அங்கிருந்து முதலில் தனது மகனைத் தூக்கி வீசியுள்ளார். பின்னர் சில விநாடிகளில் அவரும் கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் நடந்த இடத்திலிருந்து வெறும் 20 மீட்டர் தொலைவில் விநாயகர் பந்தல் அமைக்கப்பட்டிருந்த போதிலும், இந்த விபரீதத்தை யாரும் உடனடியாகக் கவனிக்கவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகு, அந்த வழியாகச் சென்ற ஒருவர், தாயும் மகனும் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கொடூர சம்பவத்தின் சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகள் வெளியாகியுள்ளன. அதில், பூஜா தனது மகனுடன் லிஃப்டில் 13வது மாடிக்குச் செல்வதும், பின்னர் குழந்தை கீழே தூக்கி வீசுவதும், அடுத்த சில நொடிகளில் பூஜாவும் குதிப்பதும் பதிவாகியுள்ளது. குடும்பத்தினர் நல்ல வசதியான நிலையில் இருந்ததால், தற்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. பூஜாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை ஆய்வு செய்து, இந்த விபரீத முடிவிற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.