வீட்டின் தண்ணீர் தொட்டியில் வீசி 3 மாத பெண் குழந்தையை துடிதுடிக்க கொன்ற தாய் கைது
*ஆம்பூரில் பரபரப்பு
ஆம்பூர் : ஆம்பூரில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் வீசி 3 மாத பெண் குழந்தையை துடிதுடிக்க கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டித்தோப்பு துணை மின்நிலையம் அருகே வசித்து வருபவர் அமீர் பாஷா(50), ஓட்டல் ஊழியர்.
இவரது மனைவி ஆஷியா(45). வீட்டின் தரைதளத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டின் மேல் மாடியில் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டில் உள்ள தனியார் ஷூ நிறுவனத்தில் வேலை செய்யும் அக்பர் பாஷா(27) என்பவர், மனைவி ஆஸ்லியா தஸ்மீன்(23) மற்றும் 3 குழந்தைகளுடன் வாடகைக்கு வசித்து வருகிறார்.
இவர்களது 3வது பெண் குழந்தை ஹர்பா பாத்திமா பிறந்து 3 மாதங்களே ஆகிறது. இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் இருந்த குழந்தை ஹர்பா பாத்திமாவை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் ஆஸ்லியா தேடி உள்ளார். பின்னர், கீழ் வீட்டிற்கு வந்து அங்கிருந்த ஆஷியாவிடன் தனது குழந்தையை காணவில்லை என கூறி உள்ளார். அதன்பிறகு இருவரும் குழந்தையை தேடி உள்ளனர்.
அப்போது, வீட்டின் படிக்கட்டு அடியில் உள்ள தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது குழந்தை பேச்சு மூச்சற்ற நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், குழந்தை ஹர்பா பாத்திமா ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை எப்படி வந்தது? முன்விரோதம் காரணமாக யாரேனும் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து தொட்டியில் வீசி கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என குழந்தையின் பெற்றோர், வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, குழந்தையின் தாய் ஆஸ்லியா தஸ்மீன் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரித்தனர். அப்போது, ஆஸ்லியா தஸ்மீன் தனது குழந்தையை வீட்டின் தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீசாரிடம் ஆஸ்லியா தஸ்மீன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது: எனக்கு மூன்றாவது குழந்தை வேண்டாம் என கூறி வந்தேன். ஆனால் வீட்டில் கேட்கவில்லை.
தற்போது எனக்கு உடல் நலம் பாதிப்பு காரணமாக குழந்தையை பராமரிப்பதில் சிரமம் இருந்து வந்தது. எனவே, குழந்தையை கொல்ல திட்டமிட்டு தண்ணீர் தொட்டியில் வீசி விட்டேன். மேலும், என் மீது சந்தேகம் வராமல் இருக்க குழந்தையை தேடுவதுபோல் நாடகமாடினேன் என கூறியதாக தெரிவித்தனர். தொடர்ந்து, ஆம்பூர் டவுன் போலீசார், குழந்தையின் தந்தை அக்பர் பாஷா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து ஆஸ்லியா தஸ்மீனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.