வரலாற்றில் அதிகமாக ‘பொன்னான’ சாதனை பழநி கோயில் உண்டியலில் 5 கிலோ தங்கம் காணிக்கை
பழநி : பழநி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் வரலாற்றிலே அதிகபட்சமாக 5 கிலோ தங்கம் கிடைத்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கடந்த 23 நாட்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று நடந்தது. கோயில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ரொக்கமாக ரூ.2 கோடியே 81 லட்சத்து 16 ஆயிரத்து 256 கிடைத்தது. இதுதவிர தங்கம் 5,005 கிராம், வெள்ளி 11,438 கிராம், வெளிநாட்டு கரன்சி 1,324 ஆகியவை கிடைத்தன. உண்டியல் எண்ணும் பணியை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி மற்றும் கோயில் அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.
பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை முதன்முறையாக இம்முறை தான் தங்கம் அதிகளவு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு கிலோ தங்கக்கட்டிகள்- 2, நூறு கிராம் தங்கக்கட்டிகள்- 23 போன்றவையும் அடக்கம்.