வகையில் 3,500... எண்ணிக்கை 3,100 கோடியாம் கொசுக்கடியால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் வரை உயிரிழப்பு: இன்று (ஆகஸ்ட் 20) உலக கொசு தினம்
மதுரை: உலக கொசு நாள் இன்று (ஆக. 20) அனுசரிக்கப்படுகிறது. ‘மற்ற நாட்களில் மட்டும் கடிக்காமல் விட்டுருமாக்கும்,.. எல்லா நாட்களுமே கொசுக்கள் தினம்தானே...’ என்ற மைண்ட் வாய்ஸ் சத்தமாகவே கேட்கிறது. உண்மைதான். கொசுக்களால் நோய்கள் பரப்பப்படுவதை கண்டறிந்தவர் யார் தெரியுமா? பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்ட் ரோஸ், 1897, ஆகஸ்ட் 20ல் பெண் அனோபிலிஸ் கொசுக்கள் மனிதர்களுக்கு இடையே மலேரியாவை பரப்புவதையும், கொசு வயிற்றில் ஒட்டுண்ணி இருந்ததையும் கண்டறிந்தார். வரலாற்றில் இத்தருணத்தை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 20ல் உலக கொசு தினம் நிறுவப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், கொசுக்களால் பரவும் நோய்களால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் உலகின் கொடிய உயிரினத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பை இந்நாள் நமக்கு வழங்குகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மதுரை மாவட்ட தலைவர், பேராசிரியர் எம்.ராஜேஷ் கூறியதாவது: சர் ரொனால்ட் ரோஸ் ஆய்வில் பெண் கொசுக்களே மலேரியாவை மக்களிடம் பரப்புவதும் தெரிந்தது. கொசு, க்யூலிசிடே குடும்பத்தை சேர்ந்த ஒரு பூச்சியினமாகும். பொதுவாக ஆண் கொசுக்கள் தாவரச் சாற்றைப் பருகும். பெண் கொசுக்களே மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களிலிருந்தும் ரத்தத்தை உறிஞ்சும். ஒரு சமயத்தில், சராசரியாக நூறு முட்டைகள் இட்டு, அதிவேகத்தில் இனத்தைப் பெருக்குவதால்தான் ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியை எட்டி விடும் என்கின்றனர். உலகெங்கிலும் கொசுவில் சுமார் 3,500 சிற்றினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சில நோய்க்காரணிகளை கடத்துபவையாகவும், சில மனித இனத்தைத் துன்புறுத்தாமல் விலங்குகளில் மட்டும் நோய் பரப்புவனவாகவும் இருக்கின்றன. பெரும்பாலான சிற்றினங்களில் ரத்தம் உறிஞ்சும் கொசுக்கள் பெண் கொசுக்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கொசு பரவும் முறைகள்: தேங்கிய நீர்நிலைகள், வடியாத மழைநீர், திறந்தவெளி சாக்கடைகள், மூடப்படாத, நீர் இருக்கும் பாத்திரங்கள் மற்றும் தெருக்குப்பைத் தொட்டிகள் மூலம் பரவுகிறது. மேலும், மலேரியா நோயானது அனாபிலஸ் காம்பியே எனும் வகை கொசுக்களாலும், சிக்குன்குனியா ஏடிஸ் எகிப்தீ அல்லது ஏடிஸ் அல்போபிக்டஸ் (புலிக்கொசு) எனும் வகை கொசுக்களாலும், மூளைக்காய்ச்சல் க்யூலக்ஸ் டர்சாலிஸ் வகை கொசுவாலும், டெங்குக் காய்ச்சல் பொதுவாக ஏடிஸ் எகிப்தீ வகை கொசுவாலும், யானைக்கால் நோய் க்யூலக்ஸ் குயின்கிபேசியேடஸ் கொசுவாலும் பரவுகிறது. மஞ்சள் காய்ச்சல், சிகா வைரஸ் நோய் போன்றவையும் கொசுக்களால் ஏற்படுகிறது.
கட்டுப்படுத்தும் முறைகள்: தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வது, கதவு, ஜன்னலுக்கு திரைச்சீலைகள் அமைப்பது, கொசு வலைகளை பயன்படுத்துவது பலன் தரும். மீன்கள், பூஞ்சைகள், தட்டான் இன உயிரிகள், பல்லிகள், மலட்டு ஆண் கொசுக்களைப் பெருக்கல், மரபணு மாற்றம் செய்தல் போன்றவையும் கொசுக்களை கட்டுப்படுத்தும். உலகளவில் கொசுக்களால் பரவும் நோய்கள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் பேர் வரை இறக்கின்றனர். 20 கோடிக்கும் மேலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு தெரிவித்தார்.
* டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்த புதுமுறை
டெங்குவுக்கு தடுப்பூசி ஏதும் இல்லை, ஆனால் கொசுக்களில் வோல்பாச்சியா எனப்படும் இயற்கையான பாக்டீரியாவைத் தொற்ற வைப்பது, மனிதர்களுக்கு நோயைக் கடத்தும் பூச்சியின் திறனைத் தடுக்கிறது. வோல்பாச்சியா கொசுக்கள் மக்களுக்கு வைரஸ்களை கடத்தும் திறனைக் குறைத்து, டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் பரவும் அபாயத்தைக் குறைக்கிறது. வோல்பாச்சியா இல்லாத பெண் கொசுக்கள் வோல்பாச்சியா பாதிக்கப்பட்ட ஆண் கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்யும்போது, அவற்றின் முட்டைகள் குஞ்சு பொரிக்காது. ஆராய்ச்சியாளர்கள் இப்போது ஆஸ்திரேலியா, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் பிரேசில் நாடுகளில் வோல்பாச்சியாவால் பாதிக்கப்பட்ட பெண் கொசுக்களை காடுகளுக்குள் விட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.