மோன்தா புயல் ஆந்திராவில் கரையைக் கடந்த நிலையில், 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டை இறக்கிட அறிவுறுத்தல்!!
டெல்லி : வங்கக் கடலில் உருவான மோன்தா புயல், ஆந்திராவில் கரையைக் கடந்த நிலையில், 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் உருவான மோன்தா புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்பட தமிழக துறைமுகங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகம் என மொத்தம் 9 துறைமுகங்களில் கடந்த 25-ந்தேதி அன்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, புயல் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று முன்தினம் ஏற்றப்பட்டது. இதனிடையே மோன்தா தீவிர புயலாக வலுபெற்றதன் காரணமாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 6 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடித்தது.
இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடந்த நிலையில், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.