மான்டெர்ரே ஓபன் டென்னிஸ் உறுதியாய் வென்ற டயானா இறுதிப் போட்டிக்கு தகுதி
மான்டெர்ரே: மான்டெர்ரே ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் நேற்று, ரஷ்ய வீராங்கனை டயானா ஸ்னெய்டர் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மெக்சிகோவின் மான்டெர்ரே நகரில் மான்டெர்ரே ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. பிரத்யேகமாக மகளிருக்கென நடத்தப்படும் இப்போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளன.
இந்நிலையில் நேற்று நடந்த அரை இறுதிப் போட்டி ஒன்றில் ரஷ்ய வீராங்கனை டயானா மேக்ஸிமோவ்னா ஸ்னெய்டர் (21), அமெரிக்க வீராங்கனை அலிசியா மிச்செல் பார்க்ஸ் (24) மோதினர். முதல் செட்டில் ஆக்ரோஷமாக ஆடிய டயானா 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார்.
அடுத்த செட்டில் இருவரும் சம பலத்துடன் விட்டுக் கொடுக்காமல் போராடியதால் டை பிரேக்கர் வரை சென்றது. கடைசியில் அந்த செட்டையும் டயானா 7-6 (10-8) என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி போட்டியில் வென்றார். அதன் மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இத் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடக்கவுள்ளது.