வடகிழக்கு பருவ மழை, புயல் முன்னெச்சரிக்கை: பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல்
சென்னை: வடகிழக்கு பருவ மழை, புயல் முன்னெச்சரிக்கை காரணமாக பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. மோன்தா புயல் தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை உட்பட வட தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 2 மாத காலத்திற்கு பருவ மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தல்;
* சுரங்கப் பாதைகள், மேம்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்.
* காட்டாற்று ஓர சாலைகளில் பேருந்தை இயக்கும்போது கவனமாக வெள்ளத்தின் தன்மையை அறிந்து இயக்க வேண்டும்.
* தண்ணீர் குறைவாக இருப்பதாக கூறி பயணிகள் பேருந்தை இயக்க சொன்னாலும் மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும்.
* பணிமனைகளில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா என சரிபார்க்க வேண்டும்.
* பேருந்துகளில் பழுது தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
* சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என கண்காணித்தபடி கவனமாக இயக்க வேண்டும்.
* பணிமனைகளில் உள்ள டீசல் பங்க் சேமிப்பு கிடங்கில் தண்ணீர் கலக்கவில்லை என்பதை உறுதி செய்யவேண்டும்.
* இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு பேருந்து புறப்பாடு குறித்து முன்கூட்டியே குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். இவ்வாறு போக்குவரத்துதுறை அறிவுறுத்தியுள்ளது.