பருவமழை தொடங்கிய 15 நாளில் 16248 சிறப்பு மருத்துவ முகாம்கள்: 6.78 லட்சம் பேர் பயன்; அமைச்சர் தகவல்
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தற்போது வரை 15 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 16,248 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 6,78,034 பேர் பயன் பெற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் அலுவலக கூட்டரங்களில், வடகிழக்கு பருவமழை சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து 16,248 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,78,034 பேர் பயனடைந்துள்ளனர். இந்த 15 நாட்களில் காய்ச்சல் பாதிப்புகள் என்று கண்டறியப்பட்டவர்கள் 5,829 பேர், இருமல் சளி பாதிப்புகள் கண்டறியப்பட்டவர்கள் 51,107 பேர், வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் 863 பேர், இவர்கள் அனைவருக்குமே முகாம்களின் வாயிலாக மருந்து, மாத்திரைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு நலமுடன் இருக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் பாதிப்புகள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 40,000 களப்பணியாளர்கள் நாள்தோறும் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதேபோல் ஊராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளில் கொசு ஒழிப்பு பணிகளில் 25,000க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் ஈடுப்படுத்தப்பட்டு அவர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நோய் பாதிப்புகள் குறித்து மிகத் தீவிரமாக தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. டெங்கு பொறுத்தவரை தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக கட்டுக்குள் இருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை டெங்கு காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,725 பேர், உயிரிழப்புகள் 9 பேர் தான் உயிரிழப்புகள் இல்லாத வகையில் இத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.