சீசன் முடிந்து பருவமழை வந்தாலும் தட்டுப்பாடின்றி கிடைக்கும் தர்பூசணி
*பெரம்பலூரில் அமோக விற்பனை
பெரம்பலூர் : தட்டுப்பாடின்றி கிடைக்கும் பழமாக மாறிவிட்ட தர்பூசணி. பருவமழை சீசனிலும் பெரம்பலூரில் பரபரப்பாக விற்பனையாகிறது.கோடை வெப்பத்தின் தாகத்தை தணிக்கின்ற தாரக மந்திரமாக பொதுமக்கள் உச்சரிக்கின்ற வார்த்தை தர்பூசணி.
வழக்கமாக இளநீ, வெள்ளரிப்பிஞ்சு, முலாம்பழம் போன்றவை முந்திக் கொண்டு வந்தாலும், இதுதான் சீசன் எதுவும் இன்றி, தடையின்றி எப்போதும் தர்பூசணி பழங்கள் கிடைப்பதால் அவை விற்பனையில் விரும்பத் தக்க வகையில் தவிர்க்க முடியாமல் தடம் பதித்து நிற்கின்றன.
குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டுமே விற்கப்பட்டு வந்த தர்பூசணி பலன்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிப்ரவரி மாதத்தில் இருந்தே பிரபலமாகி சாலையோர கடைகளாகவும், வாகன விற்பனையாகவும் பழக்கத்திற்கு வந்துவிட்டது.
இருந்தும் தென்மேற்கு பருவ மழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் இன்னமும் சீசன் குறையாமல் திண்டுக்கல், தேனி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம் பகுதிகளில் இருந்து வாரம் ஒரு முறை வாகனங்களில் ஏற்றி வந்து மலை போல் குவித்துவைத்து மலைக்காமல் விற்கப்பட்டு வருகிறது.
ரசாயன குளிர் பானங்கள் ரகம் ரகமாக வந்து நின்றாலும் வீடு முழுக்க அனைவரும் விரும்பி சாப்பிடுகின்ற பழமாக தர்பூசணிப் பழங்கள் தடம் பதித்து விட்டதால், கிலோ ரூ.20க்கு விற்கப்படும் பழங்கள், கீற்றுகளாக 10ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு, தாகம் தணிக்கின்ற உணவுப் பொருளாக தடையின்றி கிடைத்து வருகிறது.
இவை பெரம்பலூரில் பாலக்கரை, அரியலூர் சாலை, துறையூர் சாலை, வடக்குமாதவி சாலைஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் குவித்து வைக்கப்பட்டும், சாலையோரங்களில் அடுக்கி வைக்கப்பட்டும் கிலோ 20 க்கு விற்கப்பட்டு வருகிறது.
தாகத்தை தணிப்பதற்கு மட்டுமின்றி, உடலில் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாட்டை நீக்கும் மருந்தாக பயன் படுவதால், தர்பூசணி பழங்களுக்கு சீசன் இது மட்டுமே என்று யாரும் கணித்துவிட முடியாதபடிக்கு, தவிர்க்க முடியாத படிக்கு விறுவிறுப்பு குறையாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.