தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது :இந்திய வானிலை மையம் அறிவிப்பு!!
டெல்லி : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேநிலை 21ம் தேதி வரை நீடிக்கும். இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்தம் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் இந்திய கடற்பரப்பை விட்டு விலகிச் செல்லக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 24ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் மேற்கு வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.