பணமழையில் புதுச்சேரி அரசியல் சண்டையில் ஜெயிக்க போவது யார்? லாட்டரி மார்ட்டின் மகன் புதுக்கட்சி; வேட்டு வைத்த மருமகன் ஆதவ் ஆர்ஜூனா; பாஜ செய்யும் ‘அண்டர் கிரவுண்ட்’ ஆபரேஷன்; மாறி மாறி சபதம்
கோவையை சேர்ந்த லாட்டரி அதிபரான மார்ட்டின் குடும்பத்தினர், பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். இதன் மூலம் மார்ட்டின், அவரது மகன் சார்லஸ், மருமகன் ஆதவ் அர்ஜூனா மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்து உள்ளனர். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி தொழில் நடத்தி வரும் மார்ட்டின், சில மாநிலங்களில் கிட்டத்திட்ட ரூ.1000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக மோசடி வழக்குகளை சிபிஐ, ஐடி, ஈடி பதிவு செய்து உள்ளது. இவர்களுக்கு சொந்தமான இடங்களில் மேற்கண்ட மூன்று அமைப்புகளும் அடிக்கடி சோதனை நடத்துவார்கள். இதில் இருந்து தப்பிக்க பாஜவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் சுமார் ரூ.1,400 கோடி நிதியை மார்ட்டின் நிறுவனத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு, மோசடி புகாரில் இருந்து தப்பிக்க மார்ட்டின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொரு கட்சியில் அடைக்கலம் தேடினர்.
அதன்படி, மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மிஸ்டு கால் மூலம் பாஜவில் சேர்ந்தார். பல ஆண்டுகளாக பாஜ உறுப்பினராக செயல்பட்டு வந்த சார்லசுக்கு கொட்டி கிடக்கும் பணம் மூலம் புதுச்சேரியில் சி.எம் ஆக ஆசை வந்தது. இதனால், பாஜவில் இருந்து விலகி ‘ஜோஸ் சார்லஸ் மக்கள் இயக்கம்’ (ஜேசிஎம்) என்ற ஒன்றை உருவாக்கினார். இந்த இயக்கம் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து மக்களுக்கு தன்னை அறிமுகப்படுத்தி வருகிறார். விரைவில் இந்த மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய திட்டமிட்டு, மாற்றுக்கட்சிகளில் உள்ள இன்னாள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகளை ‘ப’ வைட்டமின் மூலம் வளைத்து போடும் பணியை முடுக்கி விட்டுள்ளார். இவரது கரன்சிக்கு மயங்கி மாற்று கட்சி விஐபிக்கள் பலர் கட்சி தாவ ரெடியாக உள்ளனர். ‘பணம் பத்து செய்யும் என்பார்கள்’, இதில் புதுச்சேரி மட்டும் விதிவிலக்கா என்ன?
இதுஒருபக்கம் என்றால் மார்ட்டின் மனைவி, பாஜவின் கூட்டணி கட்சியான ஐ.ஜே.கே.வில் இணைந்தார். மார்ட்டின் மகளை திருமணம் செய்து உள்ள ஆதவ் அர்ஜூனா முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். அங்கு அவர் எதிர்பார்த்தபடி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் தவெகவில் இணைந்தார். அரசியல் வாழ்க்கையில் ஆதவ் அர்ஜூனா முன்வைக்கும் விமர்சனங்கள் சர்ச்சையாகி, அவர்களது குடும்ப உறுப்பினர்களையே தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியது. ஆதவ் அர்ஜூனா தவெகவில் இணைந்த பின், அவரது மனைவி டெய்சி ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், ‘எனது கணவரின் அரசியல் செயல்பாடுகளுக்கும், எனது குடும்பத்திற்கும் தொடர்பில்லை. ஆதவ் அர்ஜூனாவின் தனிப்பட்ட அரசியல் வாழ்க்கையை எங்கள் குடும்ப வாழ்க்கையுடன் இணைத்துப் பார்க்க வேண்டாம். எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழிலையும் தனித்தனியாகவே வைத்துக்கொள்வோம்’ என்று கூறியிருந்தார். ஆதவ் அர்ஜூனாவின் செயல்பாடுகளில் உடன்பாடு இல்லாததால்தான் அவரது மனைவியே எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டு இருந்தார்.
சமீபத்தில், நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்தின்போது பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து, ஆதவ் அர்ஜூனா பேசி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, ‘என் மாமனார் காசுல நான் வாழல... லாட்டரி வித்துக்கிட்டு சுத்தல...’ என்று கூறி பங்கம் செய்தார். இதேபோல், ‘ஆதவ் அர்ஜூனாவின் கருத்துக்கும், எங்கள் குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. சரித்திர பதிவேடு குற்றவாளி போன்றவர் ஆதவ் அர்ஜுனா. எனக்கும், அப்பாவுக்கும் பிரச்னையை ஏற்படுத்தி குடும்பத்தை பிரித்தார். தவெகவிலும் இதேபோல செயல்பட்டு வருகிறார்’ என மார்ட்டினின் மகன் சார்லசும் பொங்கி எழுந்தார்.
ஏற்கனவே குடும்ப, தொழில் போட்டியால் ஆதவ் அர்ஜூனாவுடன் உரசலில் இருந்த ேஜாஸ் சார்லஸ் தனக்கான அதிகாரத்தை பெற்று, ஆதவ் அர்ஜூனாவை வீழ்த்த புதுச்சேரி அரசியலில் கால் பதித்தார். பாஜவில் இருந்த சார்லஸ் திடீரென கட்சி தொடங்க திட்டமிட்டார். இதற்கு பாஜவும் மறைமுக ஆதரவு தந்தது. பாஜ கூட்டணியில் உள்ள முதல்வர் ரங்கசாமி, தவெகவுடன் கூட்டணி சேர முயல்வதால், அவருக்கு செக் வைக்க சார்லசுக்கு பாஜ ஆதரவு தந்தது. இதனால், சார்லஸ் பாஜவின் பி-டீம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதன் பின்னணியில் ஆதவ் அர்ஜூனா இருப்பதாக ஜோஸ் சார்லஸ் ஆதரவு தரப்புகள் கூறிய நிலையில் ஜோஸ் சார்லசுடன் நெருக்கமாக இருந்த மாஜிக்களும், தவெக பக்கம் தாவுவதற்கான பயணத்தை தொடங்கினர். இதற்கு முக்கிய காரணமாக ஆதவ் அர்ஜூனா இருப்பதாக கூறப்பட்டது. இதனால், மைத்துனர்- மச்சான் மோதல் மேலும் வலுத்தது.
குடும்பத்துக்குள் வந்து தொழிலை கைப்பற்ற முயன்று உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தியவர், தற்போது அரசியலும் தனது வளர்ச்சிக்கு மட்டுமின்றி, தான் விரும்பும் கூட்டணிக்கும் தற்போது மைத்துனரே தடையாக இருப்பதாக சார்லஸ் கருதினார். அதாவது, ஜோஸ் சார்லஸ், தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்பிய நிலையில் அவரது மைத்துனரான ஆதவ் அர்ஜூனா முதல் முட்டுக்கட்டையாக இருந்தார். அதேநேரத்தில், முதல்வர் ரங்கசாமியும் தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்பி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பாஜவை கழற்றிவிட்டு தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். புதுவையில் கூட்டணி குறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் ஆர்ஜூனா ஆகியோர் ரங்கசாமியுடன் பேசி வருகிறார்கள்.
இதேபோல், முதல்வர் ரங்கசாமியை கழற்றிவிட்டு, சார்லசுடன் கூட்டணி அமைக்க பாஜ விரும்பி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. சார்லஸ்-தவெக-பாஜ கூட்டணி சக்சஸானால், தமிழகத்திலும் அதிமுக-பாஜ-தவெக கூட்டணி அமைக்க முடியும் என பாஜ மேலிடம் கனவு காண்கிறது. இதற்கான அண்டர் கிரவுண்டு வேலையை டெல்லி தொடங்கி இருக்கிறது. கட்சியை பலப்படுத்த சார்லஸ் பணத்தை வாரி இறைத்து வருகிறார். இவரை பெருசா வளர விடக்கூடாது என்று ஆதவ் அர்ஜூனாவும் லாட்டரி தொழிலில் சம்பாதித்த பணத்தை கொட்டுகிறார். போதாக்குறைக்கு பாஜவும் ‘ப’ வைட்டமினை இறைக்க ரெடியாக இருப்பதால், புதுச்சேரியில் புயல் மழை பெய்கிறதோ இல்லையோ பணமழைக்கு பஞ்சமில்லை.
இந்த சூழலில், ‘புதுச்சேரி வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்க திட்டமிட்ட சார்லஸ், ஆதவ் அர்ஜூனாவின் சதி திட்டத்தால் கட்சி பெயரையே ‘லட்சிய ஜனநாயக கட்சி’ என்று மாற்றியமைத்து இருப்பதாக ஜேசிஎம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக தேர்தலில் மாற்று வேட்பாளரை நிறுத்தும் முடிவில் ஜோஸ் சார்லஸ் இருப்பதாகவும், இதற்காக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என சபதமெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு பேட்டியளித்த ஜோஸ் சார்லஸ், ‘விரைவில் கட்சி பெயர் அறிவிக்கப்படும். நாங்களும் புதிய கட்சி. தவெகவும் புதிய கட்சி. புதியவர்கள் ஒன்றுசேர்ந்தால் நல்லது நடக்கும் என்ற நோக்கில் விஜய்யுடன் கூட்டணி சேர நாங்கள் ஒரு முன்னெடுப்பை எடுக்கிறோம்.
எங்களுடன் கூட்டணி சேர அவர்களும் விரும்பினால் அது நடக்கும். தவெகவுடன் கூட்டணி விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா என்ன செய்தாலும் கட்சி தலைவர் விஜய்தான் முடிவுகளை எடுப்பார்’ என்றார். இதன்மூலம் தவெகவுடன் கூட்டணிக்கு ஜோஸ் மார்ட்டின் தயாராக இருப்பது உறுதியாகி உள்ளது. நாங்கள் ஒன்று சேர்ந்தால் நல்லது நடக்கும் என கூறியதன் மூலம் ஆதவ் அர்ஜூனாவை தவெகவில் விரும்பாத நிர்வாகிகள் மூலம் தொடர்ந்து இதற்கான காய்களை அவர் நகர்த்தலாம் என்பதால் கூட்டணி பந்தயத்தில் ஜெயிக்கப் போவது மச்சானா அல்லது மைத்துனரா? என்பது ஓரிரு மாதங்களில் தெரிந்துவிடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
* 41 பேரு செத்து இருக்காங்க... புதுச்சேரியில ரோடுஷோவா காமன்சென்ஸ் இருக்கா?
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறுகையில், ‘தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தை விட்டுவிட்டு புதுச்சேரியில்தான் ஆதவ் அர்ஜுனாவும், புஸ்ஸி ஆனந்தும் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றிக் கொண்டு இருகிறார்கள். இங்கு ரோடு ஷோ நடத்த வேண்டுமென கேட்கிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் காமன்சென்ஸ் இருக்கிறதா?. குறைந்தபட்ச அறிவுள்ள யாரும் இப்படி செய்ய மாட்டார்கள். இங்கு எல்லாமே ஓபன் டிரெய்ன்ஏஜ் சிஸ்டம். எதாவது நடந்தால் என்ன செய்வது. ஏற்கனவே கரூரில் 41 உயிர்கள் பலியாகி இருக்கிறார்கள். ஊரைவிட்டு ஓடி ஒளிந்து கொண்டார்கள். அப்படியிருந்தும் மீண்டும் ரோடு ஷோ கேட்கிறார்கள், இது தேவையா?’ என்றார்.
* மக்களுக்கு கால் பண்ணி சர்வே எடுக்கும் சார்லஸ்
புதுச்சேரியில் உள்ள பொதுமக்களின் செல்போன்களுக்கு ஒரு கால் வருகிறது. அதில், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நல்லவரா அல்லது நல்லவர் இல்லையா? என கேட்டு மக்களின் பல்ஸ் எப்படி இருக்கிறது என பார்ப்பதாக கூறப்படுகிறது. இதை சார்லசின் மக்கள் இயக்கம்தான் செய்வதாக கூறப்படுகிறது. ஆனால், ஜேசிஎம் மக்கள் இயக்க தலைவர் ரீகன் ஜான்குமார் தலைமையில் நிர்வாகிகள் புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், ஐவிஆர் அழைப்புக்கும், தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும்’ என கூறி உள்ளனர்.