பணமோசடி குற்றத்தில் கைது செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்ட வழக்கில் ‘ஈடி’ அதிகாரிக்கு ஜாமீன்: விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடெல்லி: பண மோசடி வழக்கில் கல்லூரி நிர்வாகிகளிடம் லஞ்சம் கேட்டதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை உதவி இயக்குநருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அரியானா மாநிலத்தில் பண மோசடி வழக்கு ஒன்றில் இரண்டு கல்லூரி நிர்வாகிகள் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையை மேற்கொண்ட அமலாக்கத்துறையின் உதவி இயக்குநர் விஷால் தீப், கல்லூரி நிர்வாகிகளை கைது செய்யாமல் இருப்பதற்காக அவர்களிடம் லஞ்சம் கேட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அமலாக்கத்துறை அதிகாரி விஷால் தீப்பை கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து விஷால் தீப் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முக்தா குப்தா, ‘குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஒருவரை தொடர்ந்து காவலில் வைப்பது, விசாரணைக்கு முந்தைய தண்டனையை வழங்குவதற்கு சமம் ஆகும். மேலும் இந்த வழக்கின் விசாரணை விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை’ என்று வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், அதிகாரியைத் தொடர்ந்து காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணைக்கு விஷால் தீப் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர்.