பணம் பறிக்கும் நோக்கில் மருத்துவ கல்வி கூடுதல் இயக்குநர் தேரணிராஜனை மிரட்டிய யூடியூபர் வராகி கைது: கீழ்ப்பாக்கம் போலீசார் நடவடிக்கை
சென்னை: மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் தேரணிராஜனிடம், பணம் பறிக்கும் நோக்கில் எக்ஸ் தளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து தெரிவித்த யூடியூபரான வராகி(எ) கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராக டாக்டர் தேரணிராஜன் உள்ளார். இவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 12ம் தேதி புகார் ஒன்று அளித்தார்.
அந்த புகாரில், நான் கடந்த 24.6.2020ம் தேதி முதல் 25.4.2025ம் தேதி வரை அதாவது 4 ஆண்டுகள் 10 மாதங்கள் சென்னை மருத்துவ கல்லூரி முதல்வராக பணிபுரிந்தேன். பின்னர் தன்னை அரசு கூடுதல் மருத்துவ கல்லூரி இயக்குநராக பணி நியமனம் செய்தது. அதன்படி நான் தற்போது பணியாற்றி வருகிறேன்.
தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கிருஷ்ணகுமார்(எ)வராகி என்பவர் கடந்த 27.4.2025ம் தேதி சமூக வலைத்தளத்தில் ‘ராஜீவ் காந்தி மருத்துவமனை லட்சணம் கொரோனா கொள்ளையனுக்கு பதவி உயர்வு சுடுகாடான சுகாதாரத்துறை’ என்றும் 20.4.2025ம் தேதி அதே சமூக வலைத்தளத்தில் ‘கொரோனா கொள்ளையன் தேரணிராஜன் செவிலியர்களிடம் கஜானா கலெக்ஷன் 2019 முதல் சொல்லி வருகிறேன்.
இவனெல்லாம் புடிச்சு உள்ள போட மாட்டாங்க’ என்ற எக்ஸ் தளம் மற்றும் யூடியூப் சேனல்களில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், தன்னை பொதுமக்களுக்கான பணி செய்யவிடாமல் தடுக்கும் நோக்கத்துடன், தன்னை பற்றி பொய்யான தகவல்களை அரசியல் நோக்கத்தோடு பணம் பறிக்கும் எண்ணத்துடன் சர்ச்சைக்குரிய வகையில், தனது நாணயத்தை சமூகத்தில் கெடுக்கும் வகையில் பரப்பி வருகிறார். இந்த பதிவை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
இதனால் எனக்கும் எனது குடும்பத்தாருக்கும், தனது நண்பர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களிடையே மிகுந்த மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பொய் செய்தியானது மக்கள் கொதிப்படைய செய்து மருத்துவ துறைக்கும் பொதுமக்களுக்கும் பகையை ஏற்படுத்தி அரசுக்கு எதிராக போராட துண்டும் வகையில் உள்ளது. தன் மீது பொய்யான தகவலை பரப்பி பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படும் வராகி என்பவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின்படி கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளம் மற்றும் எக்ஸ் தள பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது யூடியூபரான வராகி(எ) கிருஷ்ணமூர்த்தி திட்டமிட்டு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநரான தேரணிராஜனிடம் பணம் பறிக்கும் நோக்கில் தொடர்ந்து அவர்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தது உறுதியானது.
அதைதொடர்ந்து, கீழ்ப்பாக்கம் போலீசார் யூடியூபரான வராகி(எ) கிருஷ்ணமூர்த்தி மீது பிஎன்எஸ் 192), 353(1)(பி), 353(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது வராகி(எ)கிருஷ்ணமூர்த்தி போலி ஆவணங்கள் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நில அபகரித்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்து செங்கல்பட்டு சிறையில் உள்ளார்.
இந்நிலையில் செங்கல்பட்டு சிறையில் உள்ள வராகி(எ)கிருஷ்ணமூர்த்தியை கீழ்ப்பாக்கம் பேழலீசார் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் தேரணிராஜனை பணம் பறிக்கும் நோக்கில் அவதூறு கருத்து மற்றும் பதிவு செய்த வழக்கில் நேற்று கைது செய்தனர். பின்னர் செங்கல்பட்டு சிறையில் இருந்து வராகியை போலீசார் எழும்பூர் 2வது நடுவர் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் 30ம் தேதி வரை நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் வராகியை போலீசார் செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே டாக்டர் தேரணிராஜன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீனாக பணியாற்றிய போது, யூடியூபரான வாராகி(எ)கிருஷ்ணமூர்த்தி கொரோனா காலத்திலேயே தன்னை பற்றி தவறாக சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாக கூறி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது வாராகி(எ) கிருஷ்ணமூர்த்தி மீது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யூடியூபரான வராகி(எ) கிருஷ்ணமூர்த்தி பணம் பறிக்கும் நோக்கில் தொடர்ந்து அரசு அதிகாரிகளை கூறிவைத்து பொய் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தொடர் புகார்கள் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.