ஐஏஎஸ், கடற்படை அதிகாரி எனக்கூறி இளம்பெண்களிடம் உல்லாசமாக இருந்து ஏமாற்றி பணம் பறிப்பு: வாலிபர் கைது
திருவனந்தபுரம்: ஐஏஎஸ் அதிகாரி என்றும், கடற்படை அதிகாரி என்றும் கூறி இளம்பெண்களிடம் திருமண ஆசை காண்பித்து உல்லாசமாக இருந்து ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த ஆலப்புழாவை சேர்ந்த வாலிபரை எர்ணாகுளம் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள புன்னப்பரா என்ற பகுதியை சேர்ந்தவர் முகம்மது அஜ்மல் உசேன் (30). இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த இரு வருடங்களுக்கு முன் ஒரு ரயில் பயணத்தின்போது அரயன்காவு என்ற பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் முகம்மது அஜ்மல் உசேனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் ஐஏஎஸ் அதிகாரி என்றும், மசூரியில் பயிற்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதை அந்த இளம்பெண்ணும் நம்பிவிட்டார். நாளடைவில் இருவரும் நெருக்கமானார்கள். அந்த இளம்பெண்ணுக்கு முகம்மது அஜ்மல் உசேன் திருமண வாக்குறுதி அளித்து உல்லாசமாக இருந்துள்ளார்.
பின்னர் பல்வேறு காரணங்களை கூறி பெண்ணிடம் இருந்து அஜ்மல் உசேன் 30 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார். ஆனால் மீண்டும் மீண்டும் பணம் கேட்டதை தொடர்ந்து அந்த இளம்பெண் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதன்பிறகு ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அஜ்மல் உசேன் தலைமறைவானார். இதையடுத்து அந்த இளம்பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அவர் ஐதராபாத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அஜ்மல் உசேனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஒரு வருடம் சிறையில் இருந்தவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதன் பிறகும் அஜ்மல் உசேன் தன்னுடைய மோசடி வேலையை கைவிடவில்லை. கடந்த வருடம் டிசம்பரில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் அஜ்மல் உசேனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது தான் ஒரு கடற்படை அதிகாரி என்று கூறியுள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கும் திருமண ஆசை காண்பித்து பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் இவரிடம் இருந்தும் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். இதன்பிறகு வழக்கம்போல் அஜ்மல் உசேன் தலைமறைவானார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் கொச்சி மத்திய போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அஜ்மல் உசேனை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.