பணம் வாங்கி மோசடி செய்ததாக ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தொழிலதிபர் மீது சின்னத்திரை நடிகை புகார்: இரு தரப்பினரிடமும் விசாரணை
பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் வசித்து வருபவர் சின்னத்திரை நடிகை ரெகானா பேகம். இவர், நேற்று முன்தினம் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், ராஜ்கண்ணன் என்பவர் என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டார் என புகார் அளித்தார். இந்த புகாரை விசாரிக்குமாறு பூந்தமல்லி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி நேற்று மாலை ராஜ்கண்ணன் மற்றும் சின்னத்திரை நடிகை ரெகானா பேகம் என இருதரப்பினரும் வழக்கறிஞர்களுடன் பூந்தமல்லி காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். போலீசார் இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இருவரும் பணம் கொடுத்தது மற்றும் பணத்தை வாங்கியது உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சரிபார்த்த நிலையில், இதுகுறித்து நீதிமன்றத்தில் தீர்வு கண்டுகொள்வதாக கூறினர்.
இரு தரப்பினரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக எழுதி கொடுத்துவிட்டு சென்றனர். மேலும் சமூக வலை தளத்தில் ஒருவர் குறித்து ஒருவர் எந்தவித கருத்தும் தெரிவிக்கக்கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதையடுத்து, ரெகானாபேகம் அளித்த பேட்டி: நான் கஷ்டப்பட்டு சினிமா துறையில் இந்த நிலைக்கு வந்துள்ளேன். சினிமா துறையில் பணம் சம்பாதிக்கவில்லை.
14 வயதில் வீட்டு வேலை, நர்ஸ், மெஸ் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் செய்து பணத்தை சம்பாதித்தேன். ஆனால் என் மீது தொழிலதிபரான ராஜ்கண்ணன் அவதூறு பரப்பி வருகிறார். ஒரு பெண் என்றும் பாராமல் அவதூறு பரப்புகிறார். எனது பணம் முழுவதையும் மோசடி செய்துவிட்டார். தொழிலில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என கூறியதன் பேரில் முதலீடு செய்தேன். ஆனால் அவர் நஷ்ட கணக்கை காட்டியதால் இது குறித்து அவரிடம் கேட்டபோதுதான் தகராறு ஏற்பட்டது.
நான் நீதிமன்றத்தை நாடி தீர்வு காண போகிறேன். நான் இஸ்லாமிய பெண்தான். ஆனாலும் சிவனை கும்பிடுவேன். கிரிவலம் எல்லாம் செல்வேன். இவ்வாறு அவர் கூறினார். கடந்த மாதம் திருமணம் செய்து பண மோசடி செய்ததாக ராஜ் கண்ணன் அளித்த புகாரில், ரெகானா பேகம் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.