பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு உலக நாடுகள் மத்தியில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது: விக்கிரமராஜா பேச்சு
சென்னை: ஜிஎஸ்டி வரி சீரமைப்பு பற்றி வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி உயரும் பாரதத்திற்கான வரி சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
28 சதவீதம், 12 சதவீதம், 5 சதவீதம் என்று இருந்த வரி முறைகளை முறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு கூட்டங்களில் எங்கள் இடர்பாடுகளை எல்லாம் சேகரித்து அமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்றோம். நாங்கள் பல அமைச்சர்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் நாங்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தையும் உள்வாங்கி அமைச்சர் அதை தீர்த்து வைத்து உள்ளார். ஜிஎஸ்டி வரி வசூலில் அதிகாரிகள் அச்சுறுத்தல் வணிகர்களுக்கு இருப்பது பற்றியும் அமைச்சரிடம் எடுத்துச் சொன்னதும் அதையும் உரிய அறிவுரைகள் வழங்கி தீர்த்து வைத்துள்ளார்.
இப்போது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் 5 சதவீத வரிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வரியை மக்களும் மனம் மகிழ்ந்து கட்டுவார்கள். விலையும் குறையும். பிரதமர் மோடி பொறுப்பேற்றப் பிறகு உலக நாடுகள் மத்தியில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது, வளர்கிறது. இதற்கு காரணம் மோடியின் கடுமையான உழைப்புதான். இவ்வாறு கூறினார்.