தேர்தலுக்குள் ஒரு டஜன் முறை மோடி தமிழ்நாட்டுக்கு வருவார்: கார்த்தி சிதம்பரம் ‘கலாய்’
சிவகங்கை: சிவகங்கை, மானாமதுரை சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பாக முகவர்கள் கூட்டம் நேற்று சிவகங்கையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற எம்பி கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் திருத்தம் மூலம் தகுதியான வாக்காளர்களை சேர்ப்பதற்கு உதவி செய்ய வேண்டும். யாரையும் நியாயமில்லாமல் நீக்க கூடாது. தேர்தல் ஆணையம் பல இடங்களில் ஒருதலைபட்சமாக செயல்பட்டதால் அதன் நடத்தை மீது சந்தேகம் எழுகிறது. பிரதமர் மோடி கோவை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ளார். வரும் தேர்தலுக்குள் இதேபோல் குறைந்தபட்சம் தமிழகத்துக்கு ஒரு டஜன் தடவையாவது வருவார். அவர் அனைத்து அறிவிப்புகளையும் செய்த பிறகே தமிழகத்தில் தேர்தலை அறிவிப்பார்கள். மோடி அறிவித்த திட்டங்கள் எல்லாம் அமல்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மாற்றம் இருக்காது. செல்வப்பெருந்தகை தலைமையில்தான் வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும். ஆட்சியில் பங்கு என்பதை தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய சூழ்நிலையில் யார், யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், பலமுனை போட்டியில் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறும். இவ்வாறு கூறினார்.