ஒரே மாதத்தில் 3.53 கோடி பேர் பதிவு மோடியின் பரிக்ஷா பே சர்ச்சா திட்டம் கின்னஸ் சாதனை
புதுடெல்லி: மாணவர்கள், ஆசிரியர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பேசும் பரிக்ஷா பே சர்ச்சா (தேர்வு பற்றிய கலந்துரையாடல்) திட்டம் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. பிரதமர் மோடியின் திட்டமான பரிக்ஷா பே சர்ச்சா கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களையும் தேர்வை எழுத உதவும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனைகளை அளித்து வருகிறார். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் 8 வது பதிப்பிற்கு ஒரு மாதத்தில் 3.53 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்தில் பொதுமக்கள் ஈடுபாட்டு தளத்தில் அதிகம் பேர் பதிவு செய்ததற்காக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. டெல்லியில் நேற்று நடந்த விழாவில் கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், அஸ்வினி வைஷ்ணவ், ஜிதின் பிரசாதா கலந்து கொண்டனர்.