மோடி பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற சி.வி.சண்முகம்: அதிமுகவில் சலசலப்பு
திண்டிவனம்: திண்டிவனத்தில் பாஜ நடத்திய நிகழ்ச்சியில் சி.வி.சண்முகம் எம்பி, பிரதமர் மோடியின் புகழ்பாடி இருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தேஜ கூட்டணியில் அதிமுக, பாஜ அங்கம் வகித்தாலும் யார் முதல்வர் வேட்பாளர் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இதில் 2 கட்சிகளும் மாறுபட்ட கருத்துக்களை மாறி மாறி தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே பாஜவால் தோற்றோம் என வசைபாடிய சி.வி.சண்முகம், ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரை மோடியை தூக்கி பிடித்து ஜிங் ஜக் அடித்தார். இந்த சூழலில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், சி.வி.சண்முகத்தை கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்தார்.
இந்நிலையில், திண்டிவனம் அதிமுக முன்னாள் நிர்வாகியும், தற்போது பாஜ மாநில செயலாளராக உள்ளவருமான முரளி ரகுராமன் ஏற்பாட்டில் பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் 1,008 பசுக்களை கொண்டு கோ பூஜை மற்றும் 75 ஏழைகளுக்கு இலவச பசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக மக்கள் சார்பாக இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்க நலமோடு வாழ அதிமுக சார்பிலும் மோடியை வாழ்த்துகிறோம். வரி சலுகைகளை மிகப்பெரிய தீபாவளி பரிசாக மக்களுக்கு பிரதமர் கொடுத்துள்ளார்’ என்றார். திண்டிவனத்தில் தனது கீழ் பணிபுரிய மறுத்து அதிமுகவில் இருந்து வெளியேறி பாஜவில் இணைந்த முரளி ரகுராமன் நடத்திய விழாவில் சி.வி.சண்முகம் பங்கேற்றது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.