பிரதமர் மோடி பிறந்த நாள் பொதுக்கூட்டம்; 3 நிமிடமே பேசிய நடிகை நமீதாவுடன் செல்பி எடுக்க பாஜ நிர்வாகிகள் போட்டி: லேட்டா வந்த கார் டிரைவருக்கு டோஸ்
சென்னை: செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகே பாஜ சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை நமீதா பங்கேற்றார். அவர் பேசுகையில் `கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது குறைந்து விட்டது, 3 மாதங்களுக்கு முன் சிந்தூர் ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது.
அந்த நாட்டிற்குள்ளே சென்று வஞ்சம் தீர்த்து, நமது நாட்டு பெண்களை பாதுகாத்த பிரதமருக்கு நன்றி. பிரதமர் மோடி இந்திய பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார். எனேவ, இந்திய தயாரிப்பு பொருட்களை பயன்படுத்த அனைவரும் உறுதியேற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளை பாதுகாக்க பாஜவிற்கு வாக்களியுங்கள், தாமரை மலரும், தமிழ்நாடு வளரும்’’ எனக்கூறி நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தில் நடிகை நமீதா நீண்ட நேரம் பேசுவார் என எதிர்பார்த்து இருந்த நிலையில், 3 நிமிடங்களில் தனது பேச்சை முடித்துக் கொண்டதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். காரில் இருந்து நடிகை நமீதா இறங்கியதும், அவருக்கு கட்சி நிர்வாகிகள் சாலையிலேயே வைத்து பாஜ பேட்ச் அணிவித்ததால் வாகனங்கள் பின்னால் அணிவகுத்து நின்று, ஊர்ந்து சென்றன.
மேடையில் நடிகை நமீதா 3 நிமிடம் மட்டுமே பேசிவிட்டு மீண்டும் மேடையில் அமர்ந்த நிலையில், கட்சி நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நடிகை நமீதா அருகில் அமர்ந்து போட்டோ, செல்பி எடுத்து உற்சாகம் அடைந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்காமல் காரில் செல்ல முயன்றார். ஆனால், நீண்டநேரம் கார் கொண்டு வராமல் தாமதித்ததாக டிரைவரை நமீதா கை விரல் காண்பித்து கடிந்து கொண்டார்.