கடந்த 2012ம் ஆண்டு முதல் ‘லைம்’ நோயால் போராடும் மாடல் அழகி: மருத்துவமனை படங்களை பகிர்ந்து உருக்கம்
நியூயார்க்: லைம் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரபல மாடல் அழகி பெல்லா ஹடிட், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருக்கமடையச் செய்துள்ளார். பிரபல மாடல் அழகி பெல்லா ஹடிட், கடந்த 2012ம் ஆண்டு முதல் ‘லைம்’ என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
உண்ணி போன்ற பூச்சிகளால் பரவும் பாக்டீரியா மூலம் ஏற்படும் இந்த நோய், ஆரம்பத்தில் கண்டறியப்படாவிட்டால் நரம்பு மண்டலம், இதயம் மற்றும் மூட்டுகளில் கடுமையான, நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த நோயை ‘கண்ணுக்குத் தெரியாத குறைபாடு’ என்று பெல்லா ஹடிட்டும், இதே நோயால் பாதிக்கப்பட்ட அவரது தாயார் யோலாண்டாவும் அடிக்கடி குறிப்பிடுகின்றனர். இதுகுறித்து யோலாண்டா கூறும்போது, ‘நாள்பட்ட நரம்பியல் லைம் நோயின் கண்ணுக்குத் தெரியாத இயலாமையை யாருக்கும் விளக்குவது அல்லது புரிய வைப்பது கடினம்’ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த நோயின் உடல்ரீதியான வலிகளைத் தவிர, அதனால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறித்தும் பெல்லா ஹடிட் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இந்த நோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்ததால், நியூயார்க் பேஷன் வார நிகழ்ச்சியைத் தவிர்த்த பெல்லா ஹடிட், ஜெர்மனியில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனை படுக்கையில் நரம்பூசி மற்றும் ஆக்சிஜன் முகக்கவசத்துடன் அவர் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது, ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. எனினும், சிகிச்சைக்குப் பிறகு மெல்ல குணமடைந்து வரும் அவர், உடற்பயிற்சிக் கூடத்தில் டிரெட்மில்லில் நடக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘மெதுவாக நடக்கிறேன், எனது ஆற்றலை மீண்டும் பெறுகிறேன்’ என்று நம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார்.