உணவின் தரத்தை பரிசோதனை செய்ய நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம்
*கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை : திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு உணவு பகுப்பாய்வு வாகனங்கள் கிண்டி, கோவை மற்றும் சேலம் உணவு பகுப்பாய்வு கூடங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.கிரிவலப் பாதை மற்றும் கோயிலை சுற்றியுள்ள திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் வட்டார பகுதிகளில் உள்ள உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள், பேக்கரிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் இடங்களில் உணவுப் பொருட்களை உடனடி ஆய்விற்கு எடுத்து அதன் தரத்தை பரிசோதனை செய்யும் பணியில் இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகிறது.
ஆய்வின் போது, தரம் குறைவான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், உணவு பகுப்பாய்வு வாகனங்களை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனங்கள் டிசம்பர் 7ஆம் தேதி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தப்படும். நிகழ்ச்சியில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா உள்பட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.