மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு தகுதியுடைய வாக்காளர் ஒருவர் கூட நீக்கப்படக்கூடாது
சென்னை: தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியதாவது: எஸ்ஐஆர் என்ற சிறப்பு தீவிர திருத்தம் ஏன் இவ்வளவு அவசரமாக செயல்படுத்தப்படுகிறது? இந்த அவரசத்தினால்தான் பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, வாக்களிக்கும் உரிமையை இழந்தார்கள்.
குறிப்பிட்ட 12 மாநிலங்களில் மட்டுமே இந்த சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்த முயற்சிப்பதன் உள்நோக்கம் என்ன? இதனால், இந்த தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது. கர்நாடகா, மகாராஷ்டிராவில் வாக்கு திருட்டு தொடர்பாக எழுந்த நியாயமான சந்தேகங்கள் இதுவரை தீர்க்கப்படவில்லை. சிறப்பு தீவிர திருத்தம் செய்ய அலுவலர்கள் ஒரு வீட்டுக்கு சென்று, வீட்டில் யாரும் இல்லை என்பதை எல்லாம் காரணம் காட்டி, அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது அபத்தமானது.
இந்த எஸ்ஐஆரில் இருக்கும் பல குறைகளை தீர்க்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் மீது ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை ஜனநாயகத்துக்கு எதிரானது. நடுநிலையுடன் செயல்பட்டு வருகிறோம் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. அவசரகோலத்தில் எஸ்ஐஆரை செயல்படுத்தாமல், குறைகளை எல்லாம் சரிசெய்து, நிதானமாக 2026 சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு செயல்படுத்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் வேண்டுகோளாகும். இவ்வாறு கமல்ஹாசன் பேசியுள்ளார்.