சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.வஸ்தவா பதவியேற்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
புதிய தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமை செயலாளர் முருகானந்தம், சபாநாயகர் அப்பாவு, துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.ேநரு, எ.வ.வேலு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் எஸ்.அல்லி, தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடர்கள், அரசு செயலர்கள், டிஜிபி சங்கர் ஜிவால், மாநகர காவல் ஆணையர் அருண், பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், மெட்ராஸ் பார்கவுன்சில் தலைவர் பாஸ்கர், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவி என்.எஸ்.ரேவதி மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற எம்.எம்.வஸ்தவா, கடந்த 1964ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பிறந்தார். 2009ம் ஆண்டு சட்டீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் 2021ம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பணி ஒய்வு பெறுகின்றார். இவர் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் 36வது தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.