மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காது பெண்கள் பாதுகாப்பாக இல்லை என எடப்பாடி பழனிசாமி விஷமப் பிரசாரம்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற செய்தி எப்படியாவது செவியில் எட்டிவிடாதா? என்கிற காத்திருப்பில் விஷம பிரசாரத்தை நாள்தோறும் நடத்தி கொண்டிருக்கின்றனர் எடப்பாடியும் இன்னும் சில எதிர்க் கட்சிகளும். கோவை சாலையில் நடந்து சென்ற பெண் காரில் கடத்தப்படுவதாகவும், சென்னை கண்ணகி நகரை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி ஒருவர் மாயமாகி உள்ளதாகவும் அதனால் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று உண்மை நிலை தெரிவதற்கு முன்பே முந்திரிக் கொட்டையாக வந்து அயோக்கியத்தனமான அறிக்கையை வெளியிட்டார் ‘பச்சைப் பொய்’ பழனிசாமி. கோவை சம்பவம் குடும்ப தகராறில் ஏற்பட்டது என தெரிய வந்தது. ’’என்னை யாரும் கடத்தவில்லை” என அந்த பெண் வீடியோ மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இதே போல நேற்று முன்தினம் இரவு காணாமல் போன கண்ணகி நகர் மாணவியை தனிப்படை அமைத்து காலை 6.30 மணிக்கே காவல்துறை மீட்டு வீட்டில் ஒப்படைத்து விட்டது. உண்மைகள் இப்படியிருக்க தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷம பிரசாரம் செய்ததற்கு வெட்கி தலைகுனிய வேண்டும். எடப்பாடி பழனிசாமி வழியில் அன்புமணி ராமதாஸ், நயினார் நாகேந்திரன் போன்றவர்களும் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காக பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டி கொண்டிருப்பதைத்தான் அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.
திமுக அரசுக்கு எந்த வகையிலாவது களங்கம் கற்பிக்கலாம் என நினைத்து இதுபோன்ற அவதூறு பிரசாரத்தை மேற்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் முகமூடி ஒவ்வொரு நாளும் மக்களிடம் கிழிபட்டு கொண்டிருக்கிறது. பெண்களின் நலனையே முதன்மை நோக்கமாக கொண்டு செயலாற்றி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, அவர்களது பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காது. அது திரும்ப திரும்ப நிரூபணம் ஆகி கொண்டேதான் இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக அரசுக்கு எந்த வகையிலாவது களங்கம் கற்பிக்கலாம் என நினைத்து இதுபோன்ற அவதூறு பிரசாரத்தை மேற்கொள்ளும் எதிர்கட்சிகளின் முகமூடி ஒவ்வொரு நாளும் மக்களிடம் கிழிபட்டு கொண்டிருக்கிறது.