மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்க பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்
சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி அதற்குத் துணை நிற்கவுள்ள மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்க பிரதமர் அவர்கள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். அதற்காக அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன். கோவை, மதுரை, மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிக்கப்பட்ட விவகாரம் பெரும் பேசு பொருளாகியுள்ளது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல் மாற்றான் தாய் மனப்பான்மையில் நடந்து கொள்வதாக புகார் உள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தகுதியான நகரங்கள் கொண்ட பட்டியலை கடந்த 2011 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 19 இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்தது. புனே, கொச்சி, கோவை ஆகியவை இடம் பெற்றிருந்தன.
கொச்சி மற்றும் புனேவில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. கோவைக்கு மட்டும் கடந்த 14 வருடங்களாக மெட்ரோ ரயில் திட்டம் கானல் நீராகவே உள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த கடந்த 2017 ஆம் ஆண்டு கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். 2021 தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூ.6,683 கோடி மதிப்பில் கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்த நிதி ஒதுக்கப்படவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அங்கு நீண்ட நாட்களாக ஒப்புதல் வழங்காமல் காத்திருப்பில் இருந்த நிலையில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை, மதுரை, மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக பிரதமரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி!. கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதால் தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். அதற்குத் துணை நிற்கவுள்ள மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்க பிரதமர் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும்!. அதற்காக அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.