வரும் 13ல் மிசோரம் பயணத்தில் பிரதமர் மோடி முதல்முறை மணிப்பூர் செல்ல வாய்ப்பு
அய்ஸ்வால்: மிசோரமில் கட்டப்பட்டுள்ள புதிய பைராபி-சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைக்க வரும் 13ம் தேதி மிசோரம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து முதல் முறையாக மணிப்பூர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ரூ.8 ஆயிரம் கோடி செலவில் பைராபி முதல் சாய்ராங் வரை 51.38 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரலாற்றில் முதல் முறையாக மிசோரம் தலைநகர் அய்ஸ்வால் நாட்டின் பிற பகுதிகளுடன் ரயில் போக்குவரத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 13ம் தேதி மிசோரம் செல்கிறார். அய்ஸ்வாலில் உள்ள லாம்மாலில் நடைபெறும் தொடக்க விழாவில் அவர் பங்கேற்க உள்ளார்.
மிசோரமைத் தொடர்ந்து அண்டை மாநிலமான மணிப்பூருக்கும் பிரதமர் மோடி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2023 மே மாதம் மணிப்பூரில் மெய்டீஸ் மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே வன்முறை வெடித்தது. அதில் பலர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இதுவரையிலும் மணிப்பூரில் அவ்வப்போது வன்முறை வெடித்து வருகிறது. வன்முறைக்கு பிறகு ஒருமுறை கூட பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்த சூழலில் பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பிரதமரின் வருகைக்கான இறுதி பயணத்திட்டம் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை எனமணிப்பூர் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.